

சென்ட்ரம் புரோக்கிங் (Centrum Broking) நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. ஆனால் இந்த விலை உயர்வு அக்டோபரில் மட்டுமல்ல, நடப்பு செப்டம்பர் மாதத்திலும் சிமெண்ட் விலைகள் உயர்ந்தன. அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் தென்னிந்தியாவில் அதிகபட்சமாக ஒரு மூட்டைக்கு 11 ரூபாய் வரை விலை உயர்ந்தது. முன்னதாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாற்றமின்றி இருந்த சிமெண்டின் விலை செப்டம்பரில் உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் சிமெண்ட் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், புதிய வீடு கட்டுபவர்களுக்கான கட்டுமானச் செலவு கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.330 என்ற அளவில் இருந்தது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் எரிபொருள் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.40 வரை உயர்ந்தது. அந்த நேரத்தில் கட்டுமானப் பணிகளுக்கான சிமெண்ட் தேவை அதிகமாக இருந்ததால், விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஓரளவு தணிந்ததைத் தொடர்ந்து, சில சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்கத் தொடங்கினர். இதனால், நாடு முழுவதும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.349 என்ற அளவுக்கு குறைந்த நிலையில், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் உயர்த்தியது. செப்டம்பர் மாதத்தில் அகில இந்திய சராசரி வர்த்தக விலை ஒரு மூட்டைக்கு ரூ.7 அதிகரித்து, ரூ.356 என்ற அளவை எட்டியுள்ளது.
அதேவேளையில், மேற்கு இந்தியாவில் ஒரு மூட்டைக்கு 9 ரூபாய் விலை அதிகரித்தது.
வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு 5 ரூபாய் உயர்ந்தது. இந்தப் பிராந்திய வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாடு முழுவதும் சிமெண்ட் விலைகளில் கணிசமான உயர்வு ஏற்படும் என்றே ஒட்டுமொத்தப் போக்கு சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையே, சிமெண்ட் தயாரிப்பு மற்றும் போக்குவரத்திற்கு மிக முக்கியமான கச்சா எண்ணெய் மற்றும் இதர எரிபொருட்களின் விலை சமீபத்திய வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இது சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் பருவமழை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் தேவையைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்கள் முந்தைய இழப்புகளை ஈடுசெய்ய முயல்கின்றன.
இதன் விளைவாக, அக்டோபம் மாதம் மீண்டும் விலையை உயர்த்துவதன் மூலம் தங்கள் இழப்புகளை ஈடுசெய்ய சிமெண்ட் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
எனினும், செப்டம்பர் மாதத்தில் நிறுவனங்கள் விலையை உயர்த்திய போதும்கூட, பல சிமெண்ட் விற்பனையாளர்கள் தங்கள் காலாண்டு விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கில், பழைய விலையிலேயே வாடிக்கையாளர்களுக்குச் சிமெண்ட்டை விற்பனை செய்தனர். எனினும், வருகிற அக்டோபர் மாதத்தில் விலையை உயர்த்த நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தொடர் விலை உயர்வு, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு குறு கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்குப் பெரும் பட்ஜெட் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிமெண்ட் விலை உயர்வு, ஏற்கனவே அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விலை தொடர்ந்து உயர்ந்தால், கட்டுமானப் பணிகளுக்கான மொத்த செலவும் மேலும் அதிகரிக்கும் என கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.