ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு. அப்போது, அவரிடம் யார் என்ன கூறினாலும், உங்கள் மீதுள்ள மரியாதை மாறாது என ரஜினி தெரிவித்துள்ளார். முன்னதாக விஜயவாடாவில் நடைபெற்ற என்டிஆர் 100வது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைவரின் கண்களையும் கலங்க வைத்தார்.
மறைந்த நடிகர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா ஆகியோரை புகழ்ந்து பேசினார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருடன் மேடையை பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்தின் பேச்சு, தெலுங்கு தேசம் கட்சி ரசிகர்கள் மற்றும் பாலையா ரசிகர்களின் இதயங்களை வென்றது.
இதன் காரணமாக ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியினரின் விமர்சனத்துக்கு ஆளானார் ரஜினிகாந்த்,. இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். எனினும் ரஜினியை விமர்சிப்பதை ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினர் நிறுத்தவில்லை. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகப் பேசியதால் ஆந்திர மக்கள் ரஜினிகாந்த் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று நடிகை ரோஜா தெரிவித்திருந்தார். ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க சந்திரபாபு நாயுடு முதலில் பவன் கல்யாணை பயன்படுத்தினார். அவரால் ஒன்றும் முடியவில்லை. இப்போது ரஜினிகாந்தை இழுக்கப் பார்க்கிறார். அதனை ரஜினிகாந்த் தெரிந்துகொண்டால் நல்லது. யார் சேர்ந்து வந்தாலும், தனித்னியே வந்தாலும் ஜெயன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் மனதில் அவர் தான் இருக்கின்றார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் ரஜினியை சந்திரபாபு நாயுடு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விமர்சனங்கள் குறித்து பேச்சு எழுந்தது. விமர்சனங்கள் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ரஜினி, “அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. அது பற்றி சிந்திக்க கூட இல்லை. ஆனால், யார் என்ன கூறினாலும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் மாறாது” என்று கூறியுள்ளார்.