

கடல் மட்ட உயர்வு, நிலத்தடி நீர் குறைதல், புயல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கைகள் விடுத்துள்ளன. மேலும் 2100-ம் ஆண்டிற்குள் சென்னையின் பல பகுதிகள் கடலில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பூமிக்கு அடியில் புதைந்து கொண்டிருப்பதாக இயற்கை நிலைத்தன்மை (Nature Sustainability) என்ற ஆங்கில இதழில் தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
சென்னை உள்பட நாட்டில் 5 நகரங்களில் நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்படுவதாலும், கட்டடங்களின் எடை கூடி வருவதாலும், பூமிக்கு அடியில் புதையும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இயற்கை நிலைத்தன்மை (Nature Sustainability)என்ற ஆங்கில இதழ் ஒன்றில் இது தொடர்பான ஆய்வு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 2406 கட்டடங்கள் பூமிக்குள் புதையும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கட்டுமானங்களின் எடை தாங்க முடியாமலும், நிலத்தடி நீர் அதிகப்படியாக சுரண்டப்படுவதாலும் பல கட்டுமானங்கள் பூமிக்குள் புதையும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நாடு முழுவதும் சுமார் 2406 கட்டடங்கள் பூமிக்குள் புதையும் அபாயத்தில் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை உள்பட நாட்டில் உள்ள 5 நகரங்கள் நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்படுவதாலும், கட்டடங்களின் எடை கூடி வருவதாலும் பூமிக்கு அடியில் புதையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், உள்ள ஒரு கட்டடம் நில அதிர்வு சக்திகளை உறிஞ்சும் திறனை பாதிக்கலாம், இது அந்த கட்டடம் இடிந்து விழும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
நிலப்பரப்பு உள்வாங்குவதால் ஏராளமான கட்டடங்கள் சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள 23000 மேற்பட்ட கட்டடங்கள் மண் சரிவால் ஏற்படும் உள்கட்டமைப்பு சேதத்தின் காரணமாக அபாயத்தை சந்திக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மோசமான கட்டுமான நடைமுறைகள், தரமற்ற உள்கட்டமைப்பு, கட்டடங்களின் அதிக சுமை, நில அதிர்வு நிகழ்வுகள், ஏற்ற இறக்கமான நிலத்தடி நீர் மட்டங்கள் அல்லது தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் போது இந்த அபாயங்கள் தீவிரமடைகின்றன.
மல்டிடெம்போரல் இன்டர்ஃபெரோமெட்ரிக் செயற்கை துளை ரேடாரை (InSAR) அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2015 முதல் 2023 வரை பதிவான காட்சிகளை கொண்டு இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லி மீட்டர் அளவுக்கு நிலப்பரப்பு புதைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைவது பெரும்பாலும் நிலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் நிலத்தடி நீர் குறைத்து வருவதை செயற்கைகோளில் பதிவாகி உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால் பூமியின் கட்டமைப்பு பலவீனமடைவதுடன் கட்டட சேதத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி 1970-ல் இந்தியா புதிய கட்டட கட்டுமானத்திற்கான பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக ஒரு தேசிய கட்டடக் குறியீட்டை அறிமுகப்படுத்திய போதிலும், 2017-க்கு பிறகு கட்டிடங்களின் கட்டுமானத்திற்குப் பாதுகாப்பு மற்றும் மீள்தன்மையை மதிப்பிடுவதற்கான முறைப்படுத்தப்பட்ட அளவுகோல்கள் இல்லை என்பதே உண்மை.
அதேவேளையில் சென்னையில் 958 கட்டடங்கள் அபாயத்தில் இருப்பதாகவும் அடுத்த 30 ஆண்டுகளில் அபாய அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் நிலத்தடி நீர் மட்டத்தை அவ்வப்போது கடல்நீர் சமநிலைப்படுத்துவதால் மற்ற நகரங்களுக்கு இருக்கும் அபாய அளவை காட்டிலும் சென்னைக்கு குறைவு என்றும், மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் கோடை காலத்தில் குறையும் நிலத்தடி நீர்மட்டம் பருவமழை காலங்களில் ஒரளவு மீண்டு விடுவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் பருவமழை இயக்கவியலில் காணப்பட்ட மாற்றங்கள், தாமதமான தொடக்கம் மற்றும் மாறுபட்ட மழைப்பொழிவால் நீர்நிலைகளில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இது இந்தியாவின் உள்ள மெகாசிட்டிகளில் உள்ள முக்கியமான நீர்நிலை அமைப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதை காட்டுகிறது.
இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் கிட்டத்தட்ட 0.2 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 2024-ம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகை 0.92% என்ற விகிதத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் 2030 வாக்கில், டெல்லி டோக்கியோவை விஞ்சி உலகின் மிகப்பெரிய பெருநகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி பல நகர்ப்புறங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகையில் 0.9 பில்லியனுக்கும் அதிகமானோர் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர், மேலும் 2050-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.3 பில்லியனுக்கும் அதிகமான நகரவாசிகள் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
மாறிவரும் காலநிலை, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மனித மேலாண்மை முடிவுகளின் கூட்டு விளைவுகள் உலகளவில் நிலத்தடி நீர் சரிவை அதிகரிக்கக்கூடும்.
1970 மற்றும் 2020க்கு இடையில், உலகளவில் 180க்கும் மேற்பட்ட பேரழிவு தரும் கட்டிட இடிபாடுகள் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
உதாரணமாக, 2013-ல், மும்பையில் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 61 பேர் உயிரிழந்தனர். 2019, மார்ச் 19-ம்தேதி, கர்நாடகாவின் தார்வாடில் உள்ள ஒரு கட்டிட வளாகம் இடிந்து விழுந்து 19 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளின் இந்த துயர சம்பவங்கள் நீலத்தடி நீர் மட்டம் குறைவதால் ஏற்படும் கட்டட கட்டமைப்பு சேதத்தின் கொடிய தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் நிலத்தடி நீரை காப்பாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாகவும் நிலத்தடி நீர் என்பது வெறும் தண்ணீர் தேவைக்காக மட்டுமல்லாமல் ஒரு நகரில் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு தான் என்றும் தெரிய வந்துள்ளது.