

சென்னையில் காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மளிகை பொருட்களின் விலைகள் மற்ற நகரங்களை விட சென்னையில் அதிகமாக இருப்பதால், குடும்பங்களின் சமையல் செலவுகள் அதிகரித்துள்ளன. அரிசி, தக்காளி, வெங்காயம், பூண்டு, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியுள்ளது.
காலையில் கண் விழித்ததுமே காலியாக கிடைக்கும் அஞ்சறைப்பெட்டியையும், காய்கறி பையையும் பார்த்து மலைத்து நிற்கும் சாமானிய மக்களின் வேதனையை அதிகரிக்கும் வகையில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன. இதனால் குடும்பம் நடத்த பெண்கள் திணறுகிறார்கள்.
அறுவடை குறித்த கவலைகளும், பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் பரவலான மழை காரணமாக வரத்து குறைவு காரணமாக இந்த விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் தற்போதைய முக்கியப் பொருட்களின் விலை நிலவரம் மற்றும் பாதிப்புகள்:
சில்லறை மற்றும் மொத்த விற்பனைச் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முக்கிய மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது:
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, சென்னையில் கடந்த ஆண்டு 58 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அரிசி இன்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.22 அதிகம்.
பொன்னி, பச்சரிசி மற்றும் இட்லி அரிசி உள்ளிட்ட ரகங்களின் விலை 10% முதல் 37% வரை உயர்ந்துள்ளது. சில்லறை சந்தையில் சில தரமான பொன்னி அரிசி ரகங்கள் கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை விற்கப்படுகின்றன.
அதேபோல் சென்னையில் 44 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை 47 ரூபாயாக உள்ள நிலையில் டெல்லியில் ரூ.34 ஆகவும், மும்பையில் ரூ.44 ஆகவும் உள்ளது.
46 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை 56 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் 68 ரூபாய்க்கும், 122 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு 152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு விலைகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளன.
அதேபோல் சூரியகாந்தி எண்ணெய் (Sunflower oil) மற்றும் இதர சமையல் எண்ணெய்களின் விலை லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளது.
175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வேர்க்கடலை எண்ணெய் 38 ரூபாய் அதிகரித்து இன்று 213 ரூபாய்க்கும், 169 ரூபாய்க்கு விற்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 22 ரூபாய் அதிகரித்து 191 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஓராண்டில் சென்னையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
காய்கறிகள் விலை நிலவரம் (சென்னை சில்லறை சந்தை):
அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. கோயம்பேடு மற்றும் உள்ளூர் சில்லறை சந்தைகளில் சில காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது:
சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.75 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் கிலோ ரூ.55 முதல் ரூ.80 வரையும், பீன்ஸ் மற்றும் அவரை கிலோ ரூ.90 முதல் ரூ.115 வரை உயர்ந்துள்ளது.
தக்காளி தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.32 முதல் ரூ.50 வரையும், பச்சை மிளகாய் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
குடும்பங்களின் தற்போதைய நிலை :
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தாலும், மாத வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் துண்டு விழுகிறது.
விலையேற்றம் காரணமாக, முன்பு கிலோ கணக்கில் மளிகைப் பொருட்களை வாங்கிய நடுத்தரக் குடும்பங்கள், தற்போது தங்களின் தேவையை கால் கிலோ அல்லது அரை கிலோவாகக் குறைத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. உயர்தர அரிசி வகைகளுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு உற்பத்தி குறைந்ததால் வரத்து பாதிக்கப்பட்டு அரிசி விலை உயர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை தள்ளிபோட்டுள்ளனர். டிசம்பர் மாத மழை பொழிவை மட்டுமே நம்பி உள்ளனர். ஜனவரியில் தண்ணீர் கிடைப்பது சந்தேகமாக இருப்பதால், விளைச்சல் குறைந்து மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொழிலாளர் கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த விளக்கங்களை ஏற்க மறுக்கும் நுகர்வோர் ஆர்வலர்கள், சில்லறை வியாபாரிகளின் அதிகப்படியான லாப நோக்கமே விலை உயர்வுக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.