

ரயிலில் பயணம் செய்யும் போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும், ஓடும் ரயிலில் ஏறுவதும் விபத்தை ஏற்படுத்தக் கூடும். இது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ரயில்வே சட்டம் சொல்கிறது.
மின்சார ரயில்களில் பயணம் செய்யும் போது ஆட்டோமேட்டிக் ரெக்கார்டிங் வாய்ஸில் இதுபோன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்கும். இருப்பினும் கூட ஒருசிலர் ஓடும் ரயிலில் ஏறுவது உண்டு. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 23) சென்னை கிண்டி மின்சார ரயில் நிலையத்தில் 69 வமது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்து கீழே விழுந்து விட்டார்.
இதனால் அவருடைய கால்கள் பிளாட்பாரத்திற்கு கீழே சென்ற நிலையில், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் நடுவில் சிக்கினார். ரயிலில் மாட்டிக் கொண்ட இந்த முதியவர் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என கூச்சலிட்டார்.
அப்போது எதிரே பிளாட்பாரத்தில் நடந்து வந்த பயணி ஒருவர், தனது பேக்கை கீழே போட்டு விட்டு அவரைக் காப்பாறும் முயற்சியில் கை கொடுத்தார்.
ரயிலின் வேகத்தில் அந்தப் பெரியவர் சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட பயணிகள் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே ரயிலில் இருந்த பயணிகள் அவசர கால செயினை இழுத்ததும் ரயில் நின்று விட்டது.
அப்போது ஆர்பிஎப் போலீஸார் ஒருவர் உடனே ஓடி வந்து அந்த முதியவரைத் தூக்கி விட்டு காப்பாற்றினார். ஆர்பிஎப் போலீஸாருடன் சக பயணிகளும் அந்த முதியவரை காப்பாற்ற உதவி செய்தனர்.
ஓடும் ரயிலில் முதியவர் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி வீடியோ இன்று (செப்டம்பர் 24) வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும் போது நமக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த முதியவருக்கும், நேரில் பார்த்த பயணிகளுக்கும் எப்படி இருந்திருக்கும்.
ஒரு நொடியில் உயிர் பயத்தை பார்த்து விட்டார் அந்த முதியவர். நல்ல வேளையாக அந்த முதியவரை உடனே மீட்டு விட்டனர். இன்னும் சிறிது தூரம் ரயில் நிற்காமல் சென்றிருந்தால் கூட, முதியவரின் நிலைமை மோசமாகி இருக்கும்.
இனியாவது ஓடும் ரயிலில் ஏறுவதை பயணிகள் தவிர்க்க வேண்டும். இல்லையேல் ஆபத்து நிச்சயம்
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாம்பரம் டூ கடற்கரை வரை 10 நிமடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் ஓடி வந்து ஏறியதே முதியவர் செய்த பெருந்தவறு. இந்த ரயிலை விட்டால் என்ன, 10 நிமிடங்கள் காத்திருந்து பின்னால் வரும் ரயிலில் சென்றிருந்தால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது.
ஓடும் ரயிலில் பயணிகள் ஏறுவதத் தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆர்பிஎப் போலீசார் பணியில் உள்ளனர். இருப்பினும் கூட சிறிது நேரத்தை மிச்சப்படுத்த தண்டவாளத்தில் இறங்கி பிளாட்பார்மை கடப்பது மற்றும் ஓடும் ரயிலில் ஏறுவது என பொதுமக்கள் தவறு செய்கின்றனர்.
உங்கள் வாழ்க்கையை விட நீங்கள் சேமிக்க நினைக்கும் இந்த சில நிமிடங்கள் முக்கியமானது அல்ல என்பதை உணர்ந்து பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும்.