

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில், ரமணா பட பாணியில் அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டைச் சேர்ந்த தேவி (வயது 52) வயிற்றுவலி காரணமாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி சென்னை காசிமேட்டில் உள்ள வி.எஸ். மருத்துவமனைக்குச் சென்றார்.
நோயாளி தேவியை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்யுமாறு அறிவுரைத்தனர். தொடர்ந்து 5 நாட்களாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5:40 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக சில மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே உயர் நிலையில் உள்ள மருத்துவர்கள், நோயாளி இறக்கவில்லை; செயற்கை சுவாசம் மற்றும் சிபிஆர் சிகிச்சையை தொடர்ந்து அளித்து வருகிறோம் எனக் கூறினர்.
மருத்துவர்கள் மீது நம்பிக்கை இழந்த உறவினர்கள், உள்ளே சென்று பார்த்த போது தேவிக்கு எந்த அசைவும் இல்லை என்பதை உணர்ந்து, மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே இறந்து விட்ட நோயாளி தேவியை வைத்து, கிட்டத்தட்ட 10 மணி நேரம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலமானது. இதனால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் நடந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காசிமேடு காவல் துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பணத்திற்காக ஏற்கனவே இறந்த நோயாளியின் உடலை வைத்துக் கொண்டு சுமார் 10 மணி நேரம் மருத்துவம் பார்த்த இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படத்தில் இதேபோன்று ஒரு காட்சி வரும். மருத்துவமனையில் உயிரிழந்த நபரைக் காப்பாற்றுவது போல் மருத்துவர்கள் நடித்து, பணம் பறிக்கும் அந்தக் காட்சி தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
ரமணா பட பாணியில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த இந்த செயல், உறவினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்களை நம்பி வரும் நோயாளிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு காப்பாற்றும் மருத்துவர்கள் மத்தியில், இது போன்ற சில சம்பவங்கள் மருத்துவர்கள் மீது அவநம்பிக்கையை உண்டாக்குகிறது. இருப்பினும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுமாதிரியான குற்றங்கள் குறையும்.
ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் அதிக சிகிச்சை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.