

தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்துறையில் உள்ள சிக்கல்களை இப்போது தான் சரிசெய்து வருகிறோம். விரைவில் நிலைமை சீராகும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்னகம் மற்றும் மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
மின்வெட்டு மற்றும் மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டு வருகிறார். சுமார் 1 மணி நேரம் திட்டமிடப்பட்டுள்ள முதல்வரின் இந்த திடீர் ஆய்வால், மின்துறை அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.
மின்வெட்டு ஏற்படும் போது மின்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார் முதல்வர். தமிழ்நாட்டின் தினசரி மின்தேவை மற்றும் மின் உற்பத்தி குறித்த தகவல்களும் முதல்வரிடம் சொல்லப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் வழக்கத்தை விடவும், அதிக வெயில் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வரின் தொகுதியான பெரம்பூரிலும் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் இன்று திடீர் ஆய்வை மேற்கொண்டார் முதல்வர் விஜய்.
மின்வெட்டு பிரச்சனை காரணமாக அமைச்சரவையை மாற்றவும் முதல்வர் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன
இதற்கு முன்னதாக மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மின் துறைக்கு 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் செல்லியிருந்தார். ஆனால் பல இடங்களில் மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்தது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் சூழலில், முதல்வரின் ஆய்வுக்குப் பிறகு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக முப்பெரும் விழாவில், தவெக ஆட்சியில் மின்வெட்டு மற்றும் அரிவாள் வெட்டு ஆகிய இரண்டுக்கும் தான் போட்டி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகள் மின்வெட்டு பிரச்சினையை தொடர்ந்து பேசி வரும் நிலையில், முதல்வரின் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்டுகிறது.