சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! இனி புதிய குடிநீர் இணைப்புக்கு ரூ.100 கட்டணம் மட்டுமே..!!

புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும்
குடிநீர் இணைப்பு
குடிநீர் இணைப்புAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெற இடைத்தரகர்களை அணுகாமல், சென்னை குடிநீர் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புப் பணிகளுக்கான கட்டமைப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய இணைப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறைகள் குறித்த முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தங்களது வீடுகளுக்கு புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெற நினைப்பவர்கள் இனி எந்தவொரு குடிநீர் வாரிய அலுவலகங்களுக்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், இதற்கான அனைத்து நடைமுறைகளையும் இனிமேல் ஆன்லைன் வழியாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் சரியான ஆவணங்கள் சமர்ப்பித்தால் 15 நாட்களில் செயல்முறை நிறைவு செய்யப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம்.

இந்த அறிவிப்பு, பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவும், புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெறுவதற்கான உண்மையான நடைமுறைகளை விளக்குவதற்காகவும் சென்னை குடிநீர் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக்கு வாரியம் நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே செலுத்த வேண்டும். அனைத்து சேவைகளுக்கும் கட்டணங்களை இணையதளப் போர்ட்டல் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாராவது கூடுதல் பணம் கேட்டாலோ அல்லது தவறான தகவல் கூறி ஏமாற்ற முயன்றாலோ, வாரியத்தின் புகார் எண்களுக்கோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறைக்கோ உடனடியாகத் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற சென்னை குடிநீர் வாரியத்தின் (https://wsc.chennaimetrowater.in/#/nc/login) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தேவையான விவரங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பகுதி களப் பொறியாளர் நேரில் களஆய்வு செய்து ஆவணங்களைச் சரிபார்ப்பார்; விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்ட 15 நாட்களுக்குள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

கட்டணத்தைப் பொறுத்தவரையில், 500 சதுர அடி வரையிலான கட்டடப் பரப்பு கொண்ட தனி நபர் குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.100 மட்டுமே சேவைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு! இனி வாட்ஸ்அப் மூலமே சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தலாம்!
குடிநீர் இணைப்பு

500 சதுர அடிக்கு மேல் 100 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான வீடுகளுக்கு தலா 5,000 ரூபாயும், 100 சதுர மீட்டருக்கு மேல் 200 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளுக்கு தலா 7,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பழைய இணைப்புகளை புதுப்பிக்க, இடம் மாற்ற ஏற்கெனவே உள்ள குடிநீர் அல்லது கழிவுநீர் இணைப்புகளை புதுப்பித்தல் அல்லது வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு இணைப்புக்கும் தலா ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுதவிர, அடுக்குமாடி குயிருப்புகள் 200 சதுர மீட்டர் வரை குடிநீர், கழிவுநீர் கட்டணம் என தலா ரூ.7,500 செலுத்த வேண்டும். குடியிருப்பு அல்லாத அலுவலகம், உள் நோயாளி வசதி இல்லாத மருத்துவமனைகள், தங்கும் வசதி இல்லாத கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற வணிக கட்டிடங்களுக்கு ஒவ்வொரு 100 சதுர மீட்டருக்கும் தலா ரூ.7,500/- கட்டணம் வசூலிக்கப்படும்.

ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு ஒவ்வொரு 50 சதுரமீட்டருக்கும் தலா ரூ.7,500 கட்டணமும், உள் நோயாளி வசதிகொண்ட மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு 25 சதுரமீட்டருக்கு ரூ.7,500 கட்டணமும் வசூலிக்கப்படும்.

உதவி எண்: ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் CMWSSB வாடிக்கையாளர் சேவை மையத்தை 044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்! இனி அனுமதியின்றி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!
குடிநீர் இணைப்பு

எனவே புதிதாக குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு பெற விரும்புவோர் சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com