
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்.எஸ்.தோனியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இருப்பினும் தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. தோனிக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை அணி நிர்வாகம் நியமித்தது. ஆனால் இருவரது கேப்டன்சியிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், தோனியே மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
மற்ற ஐபிஎல் அணிகளில் மூத்த வீரர்களின் இடத்தை நிரப்பும் இளம் வீரர்களை எப்போதோ கண்டுபிடித்து விட்டனர். ஆனால் சென்னை அணியில் மட்டும் தோனியின் இடத்தை நிரப்ப இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை. ஆகையால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனியின் இடத்தை நிரப்ப இப்போதே தீவிரமாக திட்டமிட்டு வருகிறது சென்னை அணி நிர்வாகம்.
கடந்த சில மாதங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேடிங் முறையில் வாங்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவின. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதோடு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை அளிக்கவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சஞ்சு சாம்சன், சென்னை அணியில் விளையாடுவது என் கையில் இல்லை என புன்னகையுடன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைவது இன்னும் உறுதியாகவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். தோனியின் இடத்தை நிரப்ப ஒரு கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் சிறந்தத் தேர்வாக இருப்பார். எனினும் இரு அணி நிர்வாகமும் சமரசம் ஆனால் மட்டுமே இது சாத்தியம்.
2026 ஐபிஎல் தொடரில் வலிமையாக திரும்பி வருவோம் என தோனி ஏற்கனவே கூறியிருந்தார். இதற்காக இப்போதிருந்தே அணி வீரர்களை தேர்வு செய்ய களமிறங்கியுள்ளது சென்னை அணி நிர்வாகம். இதன்படி தற்போது மும்பையைச் சேர்ந்த ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முடிவு செய்துள்ளது.
தற்போது நடந்து வரும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்தியுள்ளார் பிரித்வி ஷா. சென்னையில் விளையாடியது குறித்து பிரித்வி ஷா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பொதுவாக சொந்த அணி வீரர் அல்லாத ஒருவரின் வீடியோவை எந்த அணியும் பகிர்ந்து கொள்ளாது. அப்படி இருக்கையில் பிரித்வி ஷா பேசிய வீடியோவை சென்னை பகிர்ந்துள்ளது என்பதால், அவர் அடுத்த ஆண்டு சென்னை அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராத நிலையில், ஐபிஎல் ஏலத்தின் போது ரகசியங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விடும்.
கடந்த சில ஆண்டுகளாக ரன் குவிப்பில் சோபிக்காத பிரித்வி ஷா, தற்போது தனது ஃபார்மை மீட்டெடுத்து அதிரடியாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சென்னை அணியில் அதிரடியான தொடக்க ஆட்டக்காரராக இவர் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.