

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பாரமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் 4 ரெயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதிக்கு திட்டமிட்டுள்ள பக்தர்கள் மாற்று போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை- திருப்பதி இடையே இயக்கப்படும் 4 விரைவு ரெயில் சேவைகள் கிட்டத்தட்ட 19 நாட்கள் வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரேணிகுண்டா யார்டில் நடைபெறவுள்ள ரெயில் பாதை நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் 4 விரைவு ரெயில்கள் (சப்தகிரி விரைவு ரெயில்கள்) டிசம்பர் 9 முதல் டிசம்பர் 27 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நீங்கள் டிசம்பர் மாதம் சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இதை கண்டிப்பாக நோட் பண்ணிக்கோங்க.
தென் மத்திய ரெயில்வேயின் குண்டக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட ரேணிகுண்டா யார்டில் ரயில் பாதை மறுசீரமைப்பு மற்றும் மின்னணு சிக்னல் (Electronic Interlocking) பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென் மத்திய ரயில்வே குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் 48 நாள்கள் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் விரைவு ரெயிலும், திருப்பதியில் இருந்து சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரெயிலும் டிசம்பர் 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் (திருப்பதி ரயில்) ரெயில்களின் விவரம்...
* ரெயில் எண் 16057: சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.
* ரெயில் எண் 16054: திருப்பதி - சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ். திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.
* ரெயில் எண் 16053: சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.
* ரெயில் எண் 16058: திருப்பதி - சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ். திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இது குறித்த தகவல் அவா்களது கைபேசி மூலம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, டிசம்பர் மாதத்தில் சென்னை - திருப்பதி இடையே பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் தங்களது ரெயில் நிலவரத்தை NTES இணையதளம் அல்லது 139 என்ற உதவி எண்ணின் மூலம் சரிபார்த்து, கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றலாம்.