

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல்வேறு தகவல்களையும், தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் பல்வேறு சேவைகளையம் எளிதாக பெறும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் (TTD) உருவாக்கப்பட்ட ‘வெங்கடாத்ரி’ (Venkatadri) டிஜிட்டல் வழிசெலுத்தல் மற்றும் பக்தா்களுக்கான உதவிச் செயலியை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தி உள்ளார். இச்செயலி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான 16-ம் தேதி முதல் முழுமையாக செயல்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று வரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் நேற்று (அக்டோபர் 12) தொடங்கிய நிலையில் வரும் 20-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தேவஸ்தானம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் ‘வெங்கடாத்ரி’ டிஜிட்டல் வழிசெலுத்தல் மற்றும் பக்தா்களுக்கான உதவிச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெங்கடாத்ரி செயலி பக்தா்கள் திருமலையில் வழி கண்டறியவும், அத்தியாவசிய வசதிகளை அடையாளம் காணவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘வெங்கடாத்ரி’ செயலி மூலம் ‘கோவிந்தா’ எனும் வாய்ஸ் அஸிஸ்டெண்ட்டும் இதில் இணைத்துள்ளனர். மேலும் இச்செயலியில், 24 மணி நேரமும் வழிகாட்டுதலை வழங்கும் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த குரல் வழி உதவியாளா் வசதியும் உள்ளது.
குறிப்பாக இணைய வசதி குறைவாகவோ அல்லது இல்லாமலோ உள்ள பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில், இச்செயலி ஆஃப்லைன் (Offline) வழிசெலுத்தல் வசதியையும் கொண்டுள்ளது.
‘வெங்கடாத்ரி’ செயலியில், கோவில் வளாகம் மற்றும் வணிக வளாகங்கள், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், தரிசன நுழைவு வாயில்கள், பக்தா்களுக்கான உதவி மையங்கள், தேவஸ்தான அலுவலகங்கள் மற்றும் விசாரணை மையங்கள், உடைமை வைப்பகங்கள், இலவச காலணி பாதுகாப்பு மையங்கள், குடிநீா் மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுக் கழிப்பறைகள்,
பேருந்து நிறுத்தங்கள், உணவகங்கள், அறை ஒதுக்கீட்டு மையங்கள், கல்யாண கட்டாக்கள், காவல் நிலையங்கள், கண்காணிப்புத் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட 25 வகையான வசதிப் பிரிவுகளின் கீழ் 350-க்கும் மேற்பட்ட இடங்களை வரைபடத்தில் காட்டுகிறது.
மேலும் பேருந்து வழித்தடங்கள் மற்றும் நேரங்களையும், அவசரக்காலத் தொடா்புகள், காவல் துறை மற்றும் தேவஸ்தான உதவி மையங்களையும் ஒரே தொடுதலில் தொடா்பு கொள்ளும் வசதியை இச்செயலி வழங்குகிறது.
உதாரணமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ள இந்த செயலியில், குடிநீர் எங்கு கிடைக்கும்? ‘கால் போலீஸ் ஸ்டேஷன்’ என்றதும் திருமலை போலீஸ் நிலையத்திற்கு போன்கால் போகும். ஆபத்து நேரங்களில் உதவவும், காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும் இது வழிவகை செய்கிறது.
திருப்பதியில் நாம் வாகனத்தை ஓர் இடத்தில் ‘பார்க்கிங்’ செய்து விட்டு ‘மார்க் மைஸ்பாட்’ (Mark My Spot) என நாம் பதிவிட்டு கொள்ளலாம். நாம் செல்ல வேண்டிய இடமெல்லாம் சுற்றி பார்த்து விட்டு, ‘மார்க் மை ஸ்பாட்’ மீண்டும் அழுத்தினால் நமது கார், அல்லது பைக்கை நிறுத்தி இருக்கும் இடத்தை இந்த செயலி வழிகாட்டும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோா் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இச்செயலி, திருமலையில் பக்தா்களின் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்காகத் தேவஸ்தானம் கியோஸ்க் (Kiosks) மையங்களையும் அமைக்கிறது.