

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை (மார்ச் 1-ம்தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம் மற்றும் சாதனைகளை மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மு. க. ஸ்டாலின் அவர்கள் 1953-ம் ஆண்டு மார்ச் 1-ம்தேதி பிறந்தார்.
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
தமிழ்நாட்டின் 8-வது முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் விளங்கும் மு.க. ஸ்டாலின், "முத்துவேல்" என்ற தனது தந்தையின் பெயரையும் தாங்கி, திராவிட அரசியலின் முக்கிய முகமாகத் திகழ்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும் :
1953-ம் ஆண்டு மு. கருணாநிதி, தயாளு அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகச் சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைவதற்கு 4 நாட்கள் முன்பு பிறந்ததால், அவரின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் இடப்பட்டது.
மு.க.ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பையும் முடிந்தார். அதன் பிறகு 1973-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றார்.
1975-ல் மு.க.ஸ்டாலின், துர்கா (எ) சாந்தாவுக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். இவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பின்னாளில் தீவிர அரசியலில் ஈடுபட்டு தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உள்ளார்.
மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்புகள்
* மு.க.ஸ்டாலின் தனது 14 வயதில், 1967-ல் தன் தாய்மாமன் முரசொலி மாறனுக்காகத் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தார்.
* 1973-ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1976-ம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக சிறைவாசம் அனுபவித்தார்.
* 1982-ம் ஆண்டு திமுக இளைஞர் அணியை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின்.
* 1984-ம் ஆண்டு முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்டாலின், 1989-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
* 2003-ல் திமுகவின் பொதுச் செயலாளராகவும், 2008-ல், பொருளாளராகப் பொறுப்பு வகித்தார்.
* மு.க.ஸ்டாலின் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
* 1996ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் 37-வது மேயராகப் பொறுப்பில் இருந்தார்.
* 2011-ம் ஆண்டு, ஸ்டாலின் முதல் முறையாகத் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
* மு.க. ஸ்டாலின் அவர்கள் 2009-ம் ஆண்டு மே 29-ம்தேதி முதல் 2011-ம் ஆண்டு மே 15-ம்தேதி வரை துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
* இவர் தன் தந்தை கலைஞர் மு. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
மு.க. ஸ்டாலினின் முக்கிய அரசியல்/மக்கள் நலத் திட்டங்கள்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திராவிட மாடல் கொள்கையின் கீழ், சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், விடியல் பயணம் மற்றும் தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட முத்தான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, எதிர்கால அரசு திட்டங்களில், விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு, சத்தான காலை உணவு வழங்கும் திட்டம்.
* நான் முதல்வன் திட்டம்: இளைஞர்களின் திறன் மேம்பாடு (Skill Development) மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டம்.
* புதுமைப்பெண் திட்டம்: அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.
* இல்லம் தேடிக் கல்வி: 2021-ம் ஆண்டு அக்டோபர் 19-ம்தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் 200,000 பெண் தன்னார்வலர்களால் தினமும் 90 நிமிடங்களுக்குக் கற்பிக்கப்படுகிறார்கள்.
* விடியல் பயணம் திட்டம்: அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்.
* தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.
* இலவச லேப்டாப்: கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்.
* இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 : 2021-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைக்கான செலவை மாநில அரசே ஏற்கும்.
* பசுமை தமிழ்நாடு இயக்கம்: மாநிலத்தின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கான சுற்றுச்சூழல் திட்டம்.
* மக்களைத் தேடி மருத்துவம்: நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் திட்டம்.
* கலைஞர் கனவு இல்லம் திட்டம் : 2030-க்குள் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற, கிராமப்புற ஏழைகளுக்கு ரூ.3.50 லட்சம் மானியத்தில் கான்கிரீட் வீடுகள் வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.
தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய திட்டங்களால், மக்களின் முழு ஆதரவையும் பெற்றுச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்பற்ற தலைமையில் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகின்றன.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “சிறந்த முதலமைச்சர் என நான் பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; என் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 சிறந்த மாநிலம் எனப் புகழ்பெறும்போதுதான் நான் மகிழ்வேன்” என்றார். சொல்லியவாறே தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என உயர்த்திட புதியபுதிய திட்டங்களை செயல்படுத்தினார். தமிழ்நாடு நலம்பெற்றது; வளம் பெறத் தொடங்கியது.