

தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று பரப்புரையில் ஈடுபட்டார் முதல்வர் ஜோசப் விஜய். கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரை ஆற்றினார் முதல்வர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 30) தாராபுரத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். முதல்வரின் வருகையையொட்டி காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து மாருதி நகரில் அமைக்கப்பட்ட திடலுக்கு வந்தடைந்தார்.
கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ரோடு ஷோ மேற்கொண்ட முதல்வர் விஜய், பொதுமக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே வந்தார். அப்போது முதல்வருக்கு தவெக தொண்டர் பிரம்மாண்ட மாலையை அணிவித்து மகிழ்ந்தார். அதோடு தொண்டர்கள் முதல்வருக்கு பரிசுகளையும் வழங்கினர்.
அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று நடந்த பரப்புரையின் போது முதல்வர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். 2001 முதல் 2006 வரை அமைச்சராக பதவி வகித்த செம்மலை, 3 முறை அதிமுக எம்எல்ஏ-வாகவும், 1 முறை எம்.பி.-யாகவும் இருந்துள்ளார். அமமுக எம்எல்ஏ காமராஜ் இந்தப் பரப்புரைக்கு வந்திருக்கிறார்.
தாராபுரத்தில் முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் வேல் பரிசளித்தனர்.
அமைச்சர்களை சந்தித்து விட்டு தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக பரப்புரையத் தொடங்கினார் முதல்வர். முதல்வர் விஜய் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் தொகுதி மக்கள் அனலவருக்கும் வணக்கம். கொங்கு நாட்டு தங்கங்களே.! கொங்கு நாட்டு சிங்கங்களே.! என் சொந்தங்களே.! உங்க வீட்டுப் பிள்ளையா.. அண்ணனா.. தம்பியா.. தாய்மாமனாக.. நான் இங்கே வந்திருக்கிறேன்.
தவெக ஆட்சி அமைந்த குறுகிய நாட்களிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். 71 டாஸ்மாக் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு படை, போதை விழிப்புணர்வு, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கான ஊக்கத்தெகை உயர்வு மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. மகளிர் தொழில்முனைவோருக்காக சிங்கப்பெண் தொழில்முனைவோர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
100 நாட்களில் ரூ.1,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளோம். திருப்பூர் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இறக்குமதி வரியைக் குறைக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நமக்கு மன்னராட்சி மனப்பான்மை எல்லாம் நமக்கு கிடையாது. அண்ணாவையும் மறந்து விட்டு திமுகவுடன் சுற்றுபவர்களும் நாங்கள் அல்ல. மக்களின் நம்பிக்கையை நாம் நிச்சயமாக காப்பாற்றுவோம். எம்மதமும் சம்மதம் மட்டும் அல்ல; எம்மதமும் நம் மதம் என்று சொல்லி தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்லுவோம், கிறிஸ்துமஸ்கும் வாழ்த்து சொல்லுவோம். பக்ரீத்கும் வாழ்த்து சொல்லுவோம்.
சாதாரண ஆட்களை நிற்க வைத்து தான் திமுகவை நாங்கள் தோற்கடித்துள்ளோம். திமுகவுக்கு ரொம்பவே மறதி தான். திமுக தலைவர் கொளத்தூர் தொகுதி மக்களைப் பார்த்து போடாத ஓட்டுக்கு நன்றி சொல்கிறார். திமுக ஆட்சியில் அவ்வளவு தவறுகள் நடந்திருக்கு. அதனால் தான் மக்கள் ஓட்டுப் போடவில்லை. நாம் அவரை அன்பா பாசமா பேசுனா.. அவர் ஒருமையில் அவன் இவன்-னு பேசகிறார். நீங்க பேசுங்க சார்.. நீங்க தரம் தாழ்த்தி பேச பேச.. மக்கள் தூக்கி விடுவாங்க நம்மல. இவங்க இரண்டு பேரும் ஒன்னு தான். இவங்க என்ன தான் சதி வேலை செஞ்சாலும்.. மக்களும் கடவுளும் இருக்கும் போது ஒன்னும்...." என்று பேசி வருகிறார் முதல்வர்.