

தமிழ்நாட்டில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக 15 முதல் 64 வமதுக்குட்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம் என அதிர்ச்சி தருகின்ற இந்தத் தரவுகள்.
ஆண்கள் அதிகளவில் இறப்பதற்கு சாலை விபத்து முக்கிய காரணமாக இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேறுபாடு கடந்த 2023-ல் இருந்தே 1 லடசத்திற்கும் மேல் இருந்து வருகிறது.
2023-ல் இந்த வித்தியாசம் 1.10 லட்சமாகவும், 2024-ல் 1.07 லட்சமாகவும் இருந்தது. இந்த ஆண்டும் 1.10 லட்சமாக இருப்பதன் மூலம், பல குழந்தைகள் தந்தையின்றி வளர்வது சமுதாயத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 93 ஆயிரத்து 207 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 4,01,860. பெண்களின் எண்ணிக்கை 2,91,347. இந்த தரவுகளின் படி பார்த்தால் பெண்களை விடவும் ஆண்களின் உயிரிழப்பு கடந்த ஆண்டில் 1,10,513 அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆண்களில் உயிரிழந்தவர்களின் 86 சதவீதம் பேர், 15 முதல் 64 வயது உட்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால், பல பெண்கள் இளம் வயதிலேயே கணவனை இழப்பதும், குழந்தைகள் தந்தையை இழப்பதும் அதிகரித்துள்ளது.
சாலை விபத்துகள், புகையிலை, மதுப்பழக்கம், தற்கொலை மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாத இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளே ஆண்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணங்கள்:
* கர்ப்ப காலம் மற்றும் தாய்மை நலன் சார்ந்த காரணங்களினால் தொடக்கத்திலேயே பெண்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் உயர் இரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ஆண்களுக்கு தீவிரமாகும் வரை கண்டறிய முயற்சி எடுப்பதில்லை.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றும் மன அழுத்தமும் ஆண்களின் மரணத்திற்கு முக்கிய காரணம்.
* தற்கொலை மற்றும் சாலை விபத்துகளில் ஆண்களின் பங்கு தான் அதிகமாக இருக்கிறது.
* தமிழ்நாட்டில் 42% மரணங்கள் 65 வயதுக்கு முன்பாகவே நிகழ்கின்றன. ஆனால் ஸ்வீடன் போன்ற வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் இது வெறும் 10% மட்டுமே.
உயிரிழப்புகளைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்:
* தமிழகக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தவும், உயிரிழப்பைக் குறைக்கவும் ஆண்களுக்கான ஆரம்ப சுகாதாரப் பரிசோதனை முகாம்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது அவசியமாகிறது.
* சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும்.
* உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை கைவிட வேண்டும்.