

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையில் முதல்வர் விஜய், திமுகவின் ஊழல் குறித்தும், மிசா வழக்கில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கைதானது குறித்தும் பேசினார். அடுத்த நாளே முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்க போராட்டத்தை நடத்தியது திமுக.
இந்தப் போராட்டத்தில் தவெக குறித்தும், முதல்வர் விஜய் குறித்தும் திமுக நிர்வாகிகள் இழிவாக பேசினர். இந்நிலையில் தமிழக முதல்வர் குறித்து இழிவாக பேசியதாக இன்று காலை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணித் துளிளில் ஆ.ராசா மீதும் 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 12-ம் தேதி சனிக்கிழமை அன்று முதல்வரை கண்டித்து நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக திமுக எம்எல்ஏ காமராஜ், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு ஒருவார காலம் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு, பொது இடத்தில் தான் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
சில நாட்களுக்கு முன்பு முதல்வர் குறித்து இரட்டை அர்த்தத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை எதிர்த்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரும் கைது செய்யப்பட்டு, அன்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆபாச வார்த்தைகளை பேச வேண்டாம் எனவும், பெண்கள் குறித்து இழிவாக பேச வேண்டாம் எனவும் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையும் மீறி பேசினால், சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆ.ராசா ஆகியோர் ஆபாசமாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவான நிலையில், திமுக புள்ளிகள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்குவது, அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திமுக புள்ளிகளின் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வரும் நிலையில் இதனை திமுக எப்படி கையாளப் போகிறது என்பதே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.