

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், வருகின்ற ஜூலை 23-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கான முன்பதிவு இன்று மதியம் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை ஒரு ரசிகராக காண வேண்டும் என்ற ஆசையில் தவெக அமைச்சர் ஒருவர் விடுப்பு எடுத்துள்ளார்.
2026 பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படத்தை வெளியிட கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேல் பட ரிலீஸ் தள்ளிப் போனது. கடந்த வாரத்தில் தான் ஜனநாயகன் திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த கால இடைவெளிக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்த விஜய், தற்போது தமிழகத்தின் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது தேர்தல் முடிந்து தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு படம் வெளியாக இருப்பதால், தமிழகமே ஜூலை 23-ம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் நடித்த திரைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை.
தணிக்கை சான்றிதழ் பிரச்சனை ஒருபுறம் இருக்க, சட்டமன்ற தேர்தலின் போது ஆன்லைனில் இப்படம் லீக் ஆனது பட குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனால் ஏற்கனவே இப்படத்தை சிலர் தங்களது மொபைல் போனில் பார்த்து விட்டனர். இருப்பினும் ஜனநாயகன் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க விடுப்பு எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஜனநாயகன் பட ரிலீஸின் போது பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் ரசிகர்களாகிய நாங்கள், அந்த 3 மணி நேரம் மட்டும் பழைய ரசிகர்களாக செயல்பட கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு முதல்வர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
ஜனநாயகன் திரைப்படத்தைக் காண நான் ஏற்கனவே விடுப்பு எடுத்து விட்டேன். இனி வாழ்க்கையில் எப்போது முதல் நாள், முதல் காட்சி, அதிகாலை 4 மணி என்பது தெரியவில்லை. முதல்வர் அந்த 3 மணி நேரம் மட்டும் எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வழக்கமாக பார்க்கும் தியேட்டரில் ஜனநாயகன் திரைப்படத்தைக் காண விரும்புகிறேன்” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 19) இரவு ஜனநாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்க இருந்த சூழலில், அதற்கு முன்னதாகவே தமிழக முழுவதும் முன்பதிவு தொடங்கி விட்டது. இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் நாயகன் விஜய் தற்போது தமிழக முதல்வராக இருப்பதால், அதற்கேற்றவாறு சில மாறுதல்களை செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அவரது சினிமா பயணத்தில் ஜனநாயகன் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.