

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. இதில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இருப்பினும் ஒரு தொகுதியை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார் முதல்வர் விஜய். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது.
முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதி என்பதால், பெரம்பூருக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தற்போது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘இலவச கல்வி உபகரணங்கள்’ வழங்கும் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்தத் திட்டம் உதவும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள்:
பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், பள்ளி சீருடை மற்றும் இதர கல்வி உபகரணங்கள்.
கல்வி உபகரணங்களைப் பெறும் முறை:
உதவி தேவைப்படும் மாணவர்களும், பெற்றோர்களும் பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை நேரடியாக அணுகி வாங்கிக் கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் தேவையைத் தெரிவித்தால் மட்டுமே போதும். சட்டமன்ற அலுவலகத்திற்கு யாருடைய அனுமதியும் இன்றி நேரடியாக வந்து கல்வி உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் தொடர்பு மின்னஞ்சல்: cmvijayperambur@gmail.com.
விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் உடற்கல்வி வகுப்புகள் வாரந்தோறும் கட்டாயம் நடக்கும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் திட்டமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பெரம்பூர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுமா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதல்வர் விஜய்யின் தொகுதி என்பதால் பெரம்பூருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் அனைத்து தொகுதிகளிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினால், அது எண்ணற்ற ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் பெற்றோர்களுக்கு சிறிய அளவில் செலவும் குறையும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கடந்த மாதம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவுபடுத்தப்பட்டது. மாணவர்களுக்குத் தரமான உணவை அளிப்பதற்காக, ஆசிரியர்கள் காலை உணவை முதலில் ருசித்து தரம் பார்க்கின்றனர்.
மாணவர்களுக்கு புதிய திட்டங்களை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள திட்டங்களை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவற்றில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய சைக்கிள் வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.