மறைந்தும் வாழும் உன்னத மனிதநேயம்: தமிழ்நாடு உடலுறுப்பு தான தினத்தில் முதல்வர் விஜய் பெருமிதம்!

செப்டம்பர் 23 தமிழ்நாடு உடலுறுப்பு தான நாள்: எக்ஸ் தளத்தில் முதல்வர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
உடல் உறுப்பு தான தினம்
CM vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

நாட்டில் தினசரி விபத்துகள் அதிகளவில் நடந்து வரும் சூழலில், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 23 தமிழ்நாடு உடலுறுப்பு தான தினம் கெண்டாடப்படுகிறது. இந்நாளை பெருமையுடன் சிறப்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உடலுறுப்பு தான நாள் குறித்து தமிழக முதல்வர் விஜய், “உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
5 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்? இந்தியன் வங்கி விடுத்த அவசர எச்சரிக்கை!
உடல் உறுப்பு தான தினம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியான அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியோரின் 15 வயது மகன் ஹிதேந்திரன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சிறுவன் ஹிதேந்திரன் மூளைச்சாவு அடைந்தார். செல்ல மகனை இழந்த தாங்க முடியாத பெருந்துயரத்திலும், மருத்துவத் தம்பதி மகனின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் உள்பட பல உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர்.

ஹிதேந்திரனின் இதயமானது, சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் கடந்து, மிகக் குறைந்த நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு, 9 வயது நிரம்பிய சிறுமிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நடந்த இந்த ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வு, தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் உடலுறுப்பு தானம் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சிறுவன் ஹிதேந்திரனை நினைவு கூறும் வகையிலும், உடலுறுப்பு தானத்தை அதிகப்படுத்தவும் தமிழ்நாடு அரசு 'உடலுறுப்பு மாற்று ஆணையத்தை' (TRANSTAN) வலுப்படுத்தியது.

நாட்டிலேயே உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. சிறுவன் ஹிதேந்திரனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழக அரசு செப்டம்பர் 23-ம் தேதியை அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு உடலுறுப்பு தான தினமாக’ அறிவித்தது.

சமீபத்தில் சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஹரிஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நகைப்பிரியர்கள் குஷி.!! சரசரவென சரியும் தங்கம் விலை.! 3 நாட்களில் ரூ.1,200 சரிவு.!
உடல் உறுப்பு தான தினம்
logo
Kalki Online
kalkionline.com