

சென்னை மாநகராட்சியின் கடும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க மெட்ரோ ரயில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநகர மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் பூந்தமல்லிருந்து போரூர் வரை அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பாதைகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. மேலும் இந்தப் பாதையில் ஆளில்லா ரயில்கள் மூலம் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிரதான பாதையிலும் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ₹63,246 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் மூலம் சென்னை மாநகரவாசிகள் மற்றும் பயணிகளுக்கு நேரம் பெருமளவில் மிச்சமாகும். சாலை மார்க்கமாக பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக செல்ல குறைந்த பட்சம் 1 மணி நேரம் வரை ஆகிறது. அதிலும் முக்கியமான பீக் ஹவர் நேரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகும் போது , பயண நேரம் இன்னும் அதிகமாகிறது. புதிய மெட்ரோ ரயில் இந்த நேரத்தை பெருமளவில் குறைக்கிறது , இந்த பயண நேரம் 15-20 நிமிடங்கள் அளவில் தான் இருக்கும்.
மெட்ரோ ரயில் கடந்து வந்த பாதை:
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்துள்ளன. போரூர் மற்றும் காட்டுப்பாக்கம் பகுதிகளில் சாலைகள் மிகவும் குறுகியதாக இருந்ததால் நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்களின் பற்றாக்குறை அவ்வப்போது ஏற்பட்டு கட்டுமானப் பணிகளைத் தாமதப்படுத்தியது. இந்தப் பாதை செல்லும் காட்டுப்பாக்கம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலம் கட்டப்பட இருந்ததால் , சில காலம் சிக்கல்கள் நிலவியது , இறுதியில் அங்கு மெட்ரோ ரயில் பாதைகள் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டது.
பூந்தமல்லி சாலை எப்போதும் அதிக வாகனப் போக்குவரத்து கொண்டதால் , அடிக்கடி போக்குவரத்தை மாற்றி அமைத்து, அதிக சிரமங்களை சந்தித்து மெட்ரோ ரயில் பாலத்திற்கான தூண்களை எழுப்பியுள்ளனர். மேலும் போரூர் சந்திப்பில் முன்பே உள்ள மேம்பாலத்திற்கு மேலே உயரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட வேண்டி இருந்தது.இதற்காக மிகப்பெரிய இரும்பினால் ஆன போர்டல் பீம்கள்( தூண்) அமைக்கப்பட்டது.
இறுதிக்கட்ட பணிகள்:
தற்போதைய நிலவரத்தின் படி பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலைய பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டன .உயர்மட்டப் பாதைகள் அமைக்கும் பணி முழுமையாக முடிந்து விட்டது.
தற்போது தண்டவாளங்கள் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் வரும் ரயில்வே ஸ்டேஷன்கள் அனைத்திலும் கான்கிரீட் பணிகள் முடிவடைந்து, மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊடக தகவல்களின் படி 2026 ஜனவரி மாதம் பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் பொதுப் போக்குவரத்திற்காக இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை வாசிகளின் நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ளது. இந்த ரயில் பாதை அடுத்தக் கட்டமாக ஜூன் மாதம் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையில் இயங்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன் பின்னர் , பரந்தூர் விமான நிலையம் வரையிலும் எதிர்காலத்தில் நீட்டிக்கப்பட உள்ளது.