

இன்றைய காலகட்டத்தில் வங்கிச் சேவைகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஏதோ ஒரு வழியில் நாம் வங்கிகளைச் சார்ந்தே இருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று பெரும்பாலான வங்கிச் சேவைகள் நமது மொபைல் போன் மூலமாகவே, நாம் இருக்கும் இடத்திலிருந்தே சுலபமாகச் செய்யும் அளவிற்கு எளிமையாகிவிட்டன.
பணம் அனுப்புவது முதல் மளிகைப் பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம் செலுத்துவது என அனைத்திற்கும் இன்று மொபைல் பேங்கிங் மற்றும் UPI செயலிகளையே நாம் பெரிதும் சார்ந்துள்ளோம். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, எங்கும் எளிதாகப் பயணிக்கவும் உதவுகிறது.
வங்கியில் உள்ள நம்முடைய கணக்கில் போதுமான பேலென்ஸ் வைக்காத போது, கடனை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டாலோ அபராதம் விதிப்பது போல், வங்கிகள் செய்யும் தவறுக்காக வங்கிகள் மக்களுக்கு இழப்பீடு கொடுப்பது எத்தனை பேருக்கு தெரியும்.
வங்கிகள் தவறு செய்யும்போது அல்லது சேவையில் குறைபாடு ஏற்படும்போது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் அல்லது இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கட்டாய விதியாகும். ஆனால், விழிப்புணர்வு இல்லாததால் பலரும் இந்த இழப்பீட்டைப் பெறுவதில்லை.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, வங்கியின் தாமதம் அல்லது சேவை வழங்கத் தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.5,000 வரை (சில குறிப்பிட்ட சேவைகளுக்கு அல்லது திட்டங்களுக்கு ஏற்ப ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட அபராதத் தொகை/இழப்பீடு) இழப்பீடு வழங்கப்படுகிறது. வாங்க இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
எந்தெந்த தவறுக்கு எவ்வளவு இழப்பீடு?
* நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடனை முழுமையாக அடைத்த பிறகும், அடமானம் வைக்கப்பட்ட உங்களுடைய அசல் சொத்துப் பத்திரங்களை (Property Documents) 30 நாட்களுக்குள் வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினமும் ரூ.5,000 வங்கி உங்களுக்கு அபராதமாக வழங்க வேண்டும்.
* ஏடிஎம்-மில் பணம் வராமல், ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால், வங்கி 5 வேலை நாட்களுக்குள் அந்தப் பணத்தை உங்கள் கணக்கில் ரீஃபண்ட் செய்ய வேண்டும். 5 நாட்களுக்கு மேல் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினமும் ரூ.100 வீதம் வங்கி உங்களுக்கு அபராதம் (இழப்பீடு) வழங்க வேண்டும்.
* கிரெடிட் கார்டை ரத்து (Credit Card Closure) செய்யக்கோரி விண்ணப்பித்து, காலதாமதமானால் தினமும் ரூ.500 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதாவது கிரெடிட் கார்டை ரத்து செய்யக்கோரி வாடிக்கையாளர் விண்ணப்பித்த பிறகு, அதனை 7 வேலை நாட்களுக்குள் வங்கி முடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கணக்கு மூடப்படும் வரை தினசரி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
* பணம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு, மறுபுறம் வரவு வைக்கப்படாமல் தாமதமானால், ரிசர்வ் வங்கி விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் (எ.கா. 24 மணிநேரம்) தீர்வு காணப்பட வேண்டும். அதாவது UPI, IMPS, அல்லது net banking மூலம் பணம் அனுப்பும்போது, உங்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு, பெறுநருக்குச் சேராமல் போனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் திரும்ப வர வேண்டும்.
இல்லையெனில் பாதிக்கப்பட்ட அந்த வாடிக்கையாளருக்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினமும் ரூ.100 இழப்பீடு தரப்பட வேண்டும்.
* நீங்கள் கடனைச் சரியாகச் செலுத்தியிருந்தும், வங்கி அதைத் தவறாகப் பதிவு செய்து உங்கள் சிபில் ஸ்கோரைக் (CIBIL) கெடுத்தால், நீங்கள் புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி அதைச் சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், 30 நாட்களுக்கு மேல் சரி செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினமும் ரூ.100 இழப்பீடு பெற உங்களுக்கு உரிமை உண்டு.
* கடன் தொடர்பான விவரங்களை கிரெடிட் நிறுவனங்களுக்கு (Credit Bureaus) தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும்; அதாவது, கிரெடிட் அறிக்கையில் (CIBIL/Credit Report) உள்ள பிழைகளை சரிசெய்யத் தவறினால் அல்லது தாமதித்தால் தினமும் ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* தீ விபத்து, திருட்டு அல்லது வங்கியின் அலட்சியத்தால் லாக்கரில் உள்ள பொருள்கள் இழப்பு ஏற்பட்டால், ஆண்டு வாடகையின் 100 மடங்கு வரை இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி வழிவகை செய்துள்ளது.
இந்த தொகை வங்கி சேதத்தின் அளவு பொருத்து முடிவு செய்யப்படும். உதாரணமாக, வருடத்திற்கு ரூ.3000 லாக்கர் வாடகை தொகையாக செலுத்தினால், அதிகபட்ச இழப்பீடாக 3 லட்சம் வரையில் இழப்பீடு பெறலாம்.
* ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ உங்களுடைய கடன் தகவல் அறிக்கையை (Credit Report) ஆய்வு செய்யும் போது, அதுகுறித்த தகவல் உங்களுக்கு மின்னஞ்சல் (Email) அல்லது குறுஞ்செய்தி (SMS) வழியாக உடனடியாக அனுப்பப்பட வேண்டும். உங்கள் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்து, அதைச் சரிசெய்ய நீங்கள் புகார் அளித்தால், அதை 21 நாட்களுக்குள் திருத்தி அப்டேட் செய்ய வேண்டும். இல்லையெனில், 21 நாட்களுக்குப் பிந்தைய ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ100 வீதம் புகார்தாரருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இழப்பீடு பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
தவறு நடந்தால், முதலில் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர் (Branch Manager) அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை பிரிவில் எழுத்துப்பூர்வமாக புகார் (Complaint) அளிக்க வேண்டும்.
புகார் தொடர்பான ஒப்புகைச் சீட்டு (Acknowledgment Slip) அல்லது குறிப்பு எண்ணை (Complaint Reference Number) பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
வங்கி உங்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களின் தரப்பிலிருந்தே தானாகவே (Auto-credit) உங்கள் கணக்கில் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை.
வங்கி இழப்பீடு - 30 நாட்களுக்கு காத்திருத்தல்:
வங்கி உங்கள் கோரிக்கையை உரிய தீர்வு காண வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளிக்கலாம். வங்கிக்கு புகார் அளித்து 30 நாட்களுக்குள் வங்கி உரிய தீர்வு காண வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதேசமயம் புகார் அளித்து 30 நாட்களுக்குள் உரிய பதில் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றாலோ அல்லது இழப்பீடு தர மறுத்தாலோ நீங்கள் அடுத்தகட்டத்திற்கு செல்லலாம்.
ரிசர்வ் வங்கி ஓம்புட்ஸ்மேன் (RBI Ombudsman) இணையதளத்தில் புகார் அளித்தல்:
உங்களின் புகாருக்கு வங்கியில் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என்றால், நேரடியாக ரிசர்வ் வங்கியின் இணையதளமான RBI CMS Portal-க்குச் சென்று ஆன்லைனில் நேரடியாகப் புகார் பதிவு செய்யலாம்.
அங்கு உங்கள் வங்கி விவரங்கள், புகார் எண் (Complaint Reference Number) மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து முறையிடலாம்.
சேவை குறைபாடு அல்லது பண இழப்பு மற்றும் மன உளைச்சலுக்குக் காரணமான விவகாரங்களில், ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளர் விசாரணை நடத்தி வாடிக்கையாளருக்குச் சாதகமாக ரூ. 20 லட்சம் வரை (டிஜிட்டல் பரிவர்த்தனை புகார்களுக்கு இன்னும் கூடுதல்) இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிட முடியும்.