

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஒரு கட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த பிறகு, வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலலக்கழகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர், ஜனநாயகன் படத்தை தனது மொபைல் போனில் பார்த்துள்ளார். இதனை அவர் சமூக வலைதளத்திலும் பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக கோட்டூர்புரம் காவல் துறையினர் இவரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நபர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் யுவராஜ் என்பவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி மெயின்டனன்ஸ் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ஸ்ட்ராங் ரூமில் பணியின் போது, ஜனநாயகன் படத்தை முறைகேடாக தனது மொபைல் போனில் பார்த்துள்ளார். இதுகுறித்து பதிவு ஒன்றையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அந்தப் பதிவில், “ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் முடிந்த நாளன்று, இரவு 11 மணிக்கு தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பதை குறிப்பிட்டு, இந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், ஆன்லைனில் பரவிய நிலையில் பலரும் அதனை பதிவிறக்கம் செய்தனர். ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்தை யாரும் இப்போது பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு இதுகுறித்து போலீஸார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பணியில் இருந்த ஒருவர், ஜனநாயகன் படத்தைப் பார்த்தது மட்டுமின்றி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது. இன்னும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று கைது செய்யப்பட்டுள்ள யுவராஜை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் ஸ்ட்ராங் ரூமில் இருந்து கொண்டே படத்தைப் பார்த்தது, அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.