பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

Supriya sule and Sunethra Pawar
Supriya sule and Sunethra Pawar
Published on

காராஷ்டிராவில் உள்ள 48 பாராளுமன்றத் தொகுதிகளில் மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று பாராமதி. காரணம் இது காங்கிரஸ் கோட்டையாக இருந்து பின்னர் சரத்பவாரின் கோட்டையாக மாறியது. பூனா மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பாராமதி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் அகில இந்திய அளவில் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு தொகுதியாகும்.

காரணம், இங்கே தேர்தல் களத்தில் மோதும் இரு முக்கிய வேட்பாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். சரத்பவார் பிரிவு தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் அவரது மகள் சுப்ரியா சூலே. அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் உண்மையான தேசியவாதக் காங்கிரஸ் என தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அவருடைய மனைவி சுநேத்ரா பவார்.

இந்தத் தொகுதியில் இருந்து 1984ல் சரத்பவார் முதல் முறையாக ஜெயித்து பாராளுமன்றத்துக்குப் போனார். 1996 முதல் 2004 வரை தொடர்ந்து சரத்பவாரே இந்தத் தொகுதியின் எம்.பி. ஆவார். 2009 தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே போட்டியிட்டு ஜெயித்தார். தொடர்ந்து 2014, 2019 தேர்தல்களிலும் அவரே வென்றார். ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சண்டைகள், அரசியல் நெருக்கடிகள் இன்ன பிற காரணங்களின் விளைவாக சிவசேனா உடைந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவியை இழந்து, ஏக்நாத் ஷிண்டே பாஜகஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்தார்.

அடுத்து, அதிரடி திருப்பமாக சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. சரத்பவாரின் சகோதரியின் மகனான அஜித் பவார் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணியில் சேர்ந்து துணை முதலமைச்சர் பதவியும் பெற்றுக் கொண்டார். இப்படிப் பலவகையான அதிரடி பரபரப்பு அரசியல் சதுரங்க ஆட்டத்தின் கிளைமாக்ஸாக சரத்பவார் குடும்பத்து பாரம்பரிய தொகுதியான பாராமதியில் பவார் வீட்டு மகளா? மருமகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ப்ரேசிலில் அதிகனமழையால் 56 பேர் உயிரிழப்பு… 74 பேர் மாயம்!
Supriya sule and Sunethra Pawar

கடந்த சுமார் 30 ஆண்டுகளில் பாராமதி தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. சரத்பவார் குடும்பத்தினரே வித்யா பிரதிஷ்டான் அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலமாக தொகுதியின் பல பகுதிகளிலும் 17 பள்ளிக்கூடங்களும், 12 கல்லூரிகளும் நடத்தி வருகிறார்கள். இவற்றில் சட்டம், ஐ.டி., ஆர்கிடெக்சர் உள்ளிட்ட பலவும் அடங்கும். ‘எங்கள் ஊர் மத்திய பேருந்து நிலையமே விமான நிலையம் போல பிரம்மாண்டமாக இருக்கும்’ என்று பெருமைப்படுகிறார்கள் பாராமதிவாசிகள்.

‘களத்தில் மோதும் சரத் பவாரின் மகள், அஜித் பவாரின் மனைவி இருவரில் ஜெயிக்கப்போவது யாரு?’ என்று கேட்டால், ‘சரத்பவார் மீது மக்களுக்கு மரியாதை உள்ளது. அஜித்பவார்தான், சரத்பவாரின் அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தவர் என்பதால் அவருக்கு மக்களுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. எனவே, ரிசல்ட் எப்படி இருக்கும் என்பதை கணித்துச் சொல்வது ரொம்பக் கஷ்டம்’ என்கிறார்கள் மக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com