பஞ்சாமிர்தம் முதல் தங்க ரதம் வரை: பழனி கோவிலில் அதிரடியாக உயர்ந்த கட்டணம்..!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்கள் மற்றும் தங்க ரத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முழு விலை விவரம் இதோ.
பழனி கோவில் கட்டண உயர்வு
பழனி கோவில் கட்டண உயர்வுAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பழனி முருகன் கோவிலில் தங்க ரதப் புறப்பாடு கட்டணம் மற்றும் பிரசாதங்களின் விலை திடீரென உயர்த்தியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை அமைந்துள்ளது. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்தின் மிகப்பிரசிட்டமான பிரசாதம் ‘பஞ்சாமிர்தம்’ ஆகும்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தேன் திணைமாவு, லட்டு, அதிரசம், முறுக்கு, புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் ஆகிய 6 வகையான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த பிரசாதங்கள் அனைத்தும் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும், அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான விலையில் தரமான மூலப்பொருட்களை கொண்டு பிரசாதங்கள் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தின் அடிப்படையிலும் விலையை மாற்றியமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பிரசாதங்கள் மற்றும் தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணமும் நவம்பர் 1-ம்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. முன்அறிவிப்பு இல்லாத இந்த விலை உயர்வு பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினந்தோறும் பழனி மலைக்கோவிலில் இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த அல்லது சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் செலுத்தி இந்த தங்க ரத உலாவில் கலந்துகொள்கிறார்கள்.

பொதுவாக கார்த்திகை தீபம், சூரசம்ஹாரம், தைப்பூசம் மற்றும் பங்கனி உத்திரம் போன்ற பெரிய திருவிழா நாட்கள் மற்றும் கோவிலின் முக்கிய திருவிழா காலங்களில் மட்டும் தங்க ரதப் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படும். மற்றபடி ஆண்டின் அனைத்து நாட்களிலும் இந்த உலா நடைபெறும். மாலை விளாபூஜை மற்றும் இதர வழிபாடுகளைத் தொடர்ந்து, சரியாக இரவு 7 மணி அளவில் மலைக்கோவில் பிரகாரத்தில் தங்க ரதம் வலம் வரும்.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற இழுக்கப்படும் தங்க ரதப் புறப்பாடு கட்டணம் இதுவரை ரூ.2000 வசூலிக்கப்பட்டு வந்தது.

தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 வகையான பொருடகள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பழனி முருகன் கோவில்
பழனி முருகன் கோவில்

இந்நிலையில் விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணம் 2000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு (15 ஆண்டுகளுக்குப் பின்) இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பக்தர்கள் இந்த உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், தற்போது இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

இதேபோல் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக லட்டு, அதிரசம், முறுக்கு, தேன் தினைமாவு, சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட 6 வகையான பிரசாதங்களின் விலையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பக்தர்கள் கவனத்திற்கு: பழனி கோவிலில் செப்டம்பர் 12 முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம்
பழனி கோவில் கட்டண உயர்வு

பழனி கோவில் கட்டண உயர்வு மற்றும் பிரசாதங்கள் புதிய விலைப்பட்டியல் (50 கிராம் / 150 கிராம்) :

கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் 6 வகையான பிரசாதங்களின் புதிய விலை விவரம்:

லட்டு (50 கிராம்): ரூ. 15-ல் இருந்து ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிரசம் (50 கிராம்): ரூ. 15-ல் இருந்து ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முறுக்கு (50 கிராம்): ரூ. 15-ல் இருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்க்கரைப் பொங்கல் (150 கிராம்): ரூ. 15-ல் இருந்து ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புளியோதரை (150 கிராம்): ரூ. 15-ல் இருந்து ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேன் தினை மாவு (50 கிராம்): ரூ. 15

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பழனி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பழனி முருகன் கோவில் முதலிடம் பிடிக்க இதுதான் காரணமா? திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகள்!
பழனி கோவில் கட்டண உயர்வு

தங்க ரதக் கட்டண உயர்வு குறித்து முன்கூட்டியே முறையான அறிவிப்பு வெளியிடப்படாமல் திடீரென அமல்படுத்தப்பட்டதாலும், பிரசாதங்களின் விலை அதிகரிப்பாலும் தினந்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில ஏழை எளிய பக்தர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.