

நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமன்றி, இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் இடையே கொண்டாடப்பட்டு வருகிறார்.
2002-ல் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஒல்லியாக அப்பாவி முகத்துடன் தோற்றத்தில் ஹீரோவுக்கான இலக்கணத்தை மாற்றி எழுதியவர் தனுஷ். ஆனால் இளமைத்துள்ளல் நிறைந்த இயல்பான நடிப்பிலும் அயராத முயற்சியாலும் சமூக நலன் சார்ந்த கதைகளுடன் அனைவருக்கும் பிடித்தமானவரானார். குறிப்பாக இளைய தலைமுறையினர் இவரை வரவேற்று இவருக்கான இடத்தை அளித்து மகிழ்ந்தனர்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன், ராயன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள தனுஷ் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் பின்னணிப் பாடகராகவும் பன்முகக்கலைஞராக தற்போது வலம் வருகிறார். மேலும் தனது திறமையினால் இந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவரது தன்னம்பிக்கை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது எனலாம்.
கடந்த 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘ராயன்’ படத்துக்காக சிறந்த இயக்குருக்கான விருதும் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் தனுஷூக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னரே சிறந்த நடிகருக்கான 2 தேசிய திரைப்பட விருதுகள் (ஆடுகளம், அசுரன்) தனுஷ் பெற்றுள்ளார். மேலும் 'காக்கா முட்டை' படத்தின் தயாரிப்பாளராகவும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். 'ஆடுகளம்' படத்திற்காக 58வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகர் (Best Actor) விருதைப் பெற்ற போது அப்போது இந்த விருதைப் பெற்ற இளைய நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்துக்கு கிடைத்த அங்கீகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள், 'மெய்யழகன்', 'தங்கலான்', 'ஆடுஜீவிதம்" 'ஜமா' போன்ற பல படங்கள் அதிக அங்கீகாரம் பெறத் தகுதியானவையாக உள்ளபோது அவை புறக்கணிக்கப்பட்டு ராயன் படம் விருது பெற்றது ஏற்புடையதல்ல என்று கருத்து தெரிவித்தனர். இதனால், 'ராயன்' தேர்வு குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் ஒப்பீடுகளும் அதிகரித்தன. இது தொடர்பாக தனுஷுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ராயன் படத்துக்காக சிறந்த இயக்குநர் மற்றும் கேப்டன் மில்லர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மதிப்பிற்குரிய தேசிய விருது தேர்வுக் குழுவுக்கும், நடுவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த பயணத்தில் ஆதரவாக இருக்கும் ஊடகத்தினர், சமூக வலைதள நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நடிகராக இது என்னுடைய 3வது விருது. இயக்குநராக முதல் விருது. என்னுடைய ரசிகர்கள் இல்லாவிட்டால் இது எதுவுமே சாத்தியமில்லை. என்னுடைய மனதின் ஆழ்மனதிலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருந்தார்.
தனது தனித்துவமான நடிப்பு, இயல்பான உடல் மொழி மற்றும் பல்துறை திறமையால் வெற்றிப் படங்களை அளித்து வரும் தனுஷ் சமீபத்தில் வெளியான 'கர' என்ற படத்தை தொடர்ந்து 'ஓம்' என்ற படத்தில் நடித்து வரும் பிஸியான நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடந்த தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார் .
அப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.
"எனக்கு தேசிய விருது கிடைத்தது விமர்சனம் ஆகியுள்ளது. கடந்த ஆண்டில் வந்த மகாராஜா ,மெய்யழகன் போன்ற சில படங்கள் சிறந்த திரைப்படங்கள் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, வடசென்னை, கர்ணன், மரியான் போன்ற என் படங்கள் வெளியான போது அவற்றுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று யாரும் இவ்வளவு தீவிரமாக குரல் கொடுக்க வரவில்லை. அதற்கு கிடைக்கும் என்றார்கள் ஆனால் கிடைக்கவில்லை .இன்று கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் எனது தேசிய விருதை எதிர்த்து பேசுகிறார்கள் ஆனால் எனது பல திரைப்படங்களுக்கு தகுதியான தேசிய விருதுகள் கிடைக்காமல் போனபோது பத்து சதவீதம் பேர் கூட அதை பற்றி பேசவில்லை. ஒரே ஆண்டில் ஒரு தமிழ் நடிகருக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதை அனைவரும் கொண்டாட வேண்டும் .இதை எதிர்மறையாக பார்க்காமல் தமிழ் சினிமாவின் வெற்றியாக பார்க்க வேண்டும். 'தட்டிக் கொடுங்க தட்டி விடாதீங்க' இந்த இரண்டு தேசிய விருது தானாக அமைந்தது" என்றும் கூடவே பஞ்ச் டயலாகாக"நம்ம தல அஜித் சொன்ன மாதிரி நீயே தோத்துட்டனு ஒத்துக்கிற வரைக்கும் உன்னை யாராலயும் தோக்கடிக்க முடியாது என்று தனுஷ் பேசியது வைரலாகி வருகிறது.