

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் நடக்கும் போது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவருவது சகஜமானது தான். அவ்வகையில் தற்போதைய இடைத்தேர்தலில் Constituency Insights நிறுவனத்தின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாகவே இருக்கின்றன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக தான் வென்றிருந்தது. இதனால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகள் முதல்வர் விஜய்க்கு சாதகமாக அமைந்துள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் 2 நாட்கள் பரப்புரை மேற்கொண்டதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி இருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. அதோடு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் வெற்றி பயணத் திட்டங்கள் பெண்களுக்கு தவெக அரசின் மீது அதிக நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் 7,800 பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 36% பேர் தவெகவுக்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பு விவரம்:
தவெக - 36.0%
அதிமுக - 31.0%
திமுக - 25.8%
நாதக - 1.1%
முடிவு செய்யாதவர்கள் - 3.8%
கருத்து சொல்ல விரும்பாதவர்கள் - 2.3%
மதுராந்தகம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2,11,295
ஆண்கள் - 1,06,875
பெண்கள் - 1,07,288
மூன்றாம் பாலினத்தவர் - 64
தாராபுரம் தொகுதியில் 7,800 பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 33.8% பேர் தவெகவுக்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பு விவரம்:
தவெக - 33.8%
அதிமுக - 31.6%
திமுக - 28.4%
நாதக - 1.0%
முடிவு செய்யாதவர்கள் - 3.2%
கருத்து சொல்ல விரும்பாதவர்கள் - 2.0%
தாராபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2,22,406
ஆண்கள் - 1,03,943
பெண்கள் - 1,15,523
மூன்றாம் பாலினத்தவர் - 8
கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, 2 தொகுதிகளிலும் தவெக தான் முன்னணியில் உள்ளது. அதோடு தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
கருத்துக்கணிப்பு முடிவுகள் வெறும் கணிப்புகள் மட்டுமே. ஏனெனில் குறைந்த அளவிலான வாக்காளர்கள் மத்தியில் தான் இந்தக் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதால், இறுதி முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கக் கூடும். இருப்பினும் தவெகவுக்கான ஆதரவு அதிகமாகவே இருக்கிறது.
அதிமுகவில் நின்று வெற்றி பெற்ற பிறகு தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் மீண்டும் வேட்பாளர்களாக மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். சில பகுதிகளில் இவர்களுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், முதல்வரின் பரப்புரையால் தவெக-வின் கை ஓங்கியுள்ளது.