

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்போம் என புதிதாக பதவி ஏற்ற தமிழக வெற்றிக் கழகம் சூளுரைத்தது. அதற்கேற்ப லஞ்சம் வாங்க மாட்டோம்; வாங்கவும் விட மாட்டோம்; வாங்கியவர்களையும் விட மாட்டோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதன்படி தவெக ஆட்சியில் ஊழலும், லஞ்சமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த திமுக ஆட்சியில் ஊழல் செய்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்களில் வீடுகளில் தொடர் சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரது வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர்.
கடந்த திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்தது எனக் கூறி வரும் தவெக, லஞ்சம் கொடுக்க வேண்டாம் என மக்களிடமும் கூறி வருகிறது.
இந்நிலையில் ஊழலை மிகத் தீவிரமான குற்றமாக கருத வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து ஊழல் செய்வோரை கடுமையாக தண்டிக்கவும் அரசுக்கு அறிவுறுத்தியது மதுரை உயர்நீதிமன்றம்.
தமிழ்நாட்டில் அரங்கேறும் ஊழல் குறித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், “வேறு எந்தக் குற்றங்களை விடவும், ஊழல் குற்றங்களை மிகத் தீவிரமானதாக அரசு கருத வேண்டும். அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்கியிருந்தால், அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் ஊழல் சொத்துக்களை அனுபவிக்கும் அரசு அதிகாரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும்.
கடந்த 1988 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில், தேவையான அனைத்து சட்டத் திருத்தங்களையும் கொண்டு வர அரசு முன்வர வேண்டும். சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே அதிகாரிகளுக்கு அச்சம் பிறக்கும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஊழல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கொடுத்துள்ள அறிவுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஊழலை வேரோடு அறுக்க நினைக்கும் முதல்வர் ஜோசப் விஜய், நீதிபதிகளின் கருத்தை ஏற்று விரைவில் சட்டத் திருத்தத்தை சட்டமன்றத்தில் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஊழலற்ற ஆட்சியை வழங்குவதக தவெக அரசு சொன்னாலும், அடிமட்டத்தில் நடக்கும் சிறு சிறு ஊழல்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. லஞ்சம் கொடுத்தால் தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும் என்ற மனப்பான்மை பொதுமக்களிடம் மேலோங்கியுள்ளது. இந்த எண்ணம் முழுமையான விலகினால் மட்டுமே ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.
அதிகாரிகளுக்கு தண்டனை கொடுப்பதால் மட்டும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. உடனடியாக வேலை முடிய வேண்டும் என அவசரப்படாமல், சற்று பொறுமையாக மக்கள் காத்திருக்க வேண்டும். அதிகாரிகளும் ஊழல் இல்லாத தமிழகத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் லஞ்சம் என்ற வார்த்தை கூட இங்கிருந்து மறையும்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர தொடர் ஆய்வுகளும், கடுமையான தண்டனைகளும் அவசியம். அவ்வகையில் மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.