

இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், எழுத படிக்க தெரியாதவர்கள், குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் மோசமாகவே நடத்துகின்றனர். அதுகுறித்து பல்வேறு புகார் எழுந்தபோதும் இதுவரை இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில் தான் ஒடிசாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான ஜிது முண்டாவுக்கு கக்ரா முண்டா என்ற மூத்த சகோதரி இருந்தார். மூத்த சகோதரியின் கணவர் மற்றும் ஒரே குழந்தையும் முன்னரே இறந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு கக்ரா முண்டாவும் இறந்துள்ளார். இதனால் ஜிது முண்டாவுக்கு எஞ்சியிருந்த ஒரே உறவு அவரது அண்ணன் மட்டும்தான்.
மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் இறந்த கக்ரா முண்டா கணக்கு வைத்திருந்தார். அதில் அவரது பெயரில் ரூ.20,000 பணம் இருந்துள்ளது.
மூத்த சகோதரி இறந்தவுடன் அந்த பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா ஒடிசா கிராமின் வங்கிக்கு சென்று கேட்ட போது சம்பந்தப்பட்ட கக்ரா முண்டா வரவேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் ஜிது முண்டா தனது தங்கை இறந்து விட்டார் என்று கூறியதற்கு கல்ரா முண்டா இறப்பு சான்றிதழ் மற்றும் பல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் பழங்குடியினரான ஜிதுவிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து ஜீதுவிற்கு எந்த ஒரு விவரமும் தெரியாத நிலையில் விரக்தியடைந்த ஜீது சுடுகாட்டிற்குச் சென்று தனது சகோதரியின் உடலை அடக்கம் செய்த இடத்திலிருந்து அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து எலும்புக்கூட்டையே ஆதாரமாகக் காட்ட வங்கிக்குக் கொண்டு சென்றுள்ளார். எலும்புக்கூட்டை பார்த்த வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜீது முண்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் பலமுறை வங்கிக்கு அலைந்துவிட்டேன். ஆனால் அங்குள்ளவர்கள் பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு கூறினார்கள். என் சகோதரி இறந்துவிட்டார் என்று நான் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவரை நேரில் அழைத்து வந்தால்தான் பணம் தருவோம் என்று பிடிவாதமாக இருந்தனர். அதனால், மிகுந்த மன உளைச்சலில் கல்லறையைத் தோண்டி, அவர் இறந்துவிட்டார் என்பதற்கு ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டை எடுத்து வந்தேன்” என்றார்.
இந்தச் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டு, ஜிதுவிடம் இருந்து எலும்புக்கூட்டைப் பெற்று மீண்டும் அடக்கம் செய்ய உதவியதுடன், அவருக்குத் தேவையான சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்றுத் தந்து, அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில், "ஜீது படிப்பறிவில்லாத பழங்குடியின மனிதர். வாரிசு சான்றிதழ் அல்லது வாரிசுதாரர் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. உயிரிழந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகளை அவருக்குப் புரிய வைக்க வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர்" என்றார்.
இதற்கிடையே ஜிது முண்டா அவரது தங்கையின் எலும்புக்கூட்டை சுமந்து செல்வது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, "ஒரு ஏழை மனிதன் தன் சொந்தப் பணத்தைப் பெறுவது இவ்வளவு கடினமா?" என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் ஒரு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் மனிதர்களிடத்தில் மனிதாபிமானம் இல்லாதது குறித்த தீவிரத்தையே காட்டுகிறது.
இதனிடையே உரிமை கோரப்படாத வங்கித் கணக்குகளில் பல பில்லியன் ரூபாய் முடங்கிக் கிடப்பதாகப் பிரதமர் மோடியே தெரிவித்துள்ளது நிலையில் வெறும் 20,000 ரூபாய்க்கான ஒரு வயதான பழங்குடியின முதியவர் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.