

துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதங்கள் சட்டசபையில் நடந்து வரும் சூழலில், இன்று போக்குவரத்து துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை 110 விதி எண் கீழ் சட்டசபையில் இன்று வெளியிட்டார் முதல்வர் ஜோசப் விஜய்.
இதன்படி விரைவில் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்க ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் ஒரே நாளில் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை பொதுமக்களே பதிவிறக்கம் செய்யும் வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2021 முதல் 2026 வரை ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் முதல்வர் விஜய் விதி எண் 110-ன் கீழ் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடும் போது, திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் குறிப்பிட்டு அமைதியாக இருக்கும் படியும் அறிவுறுத்தினார். அதன்பிறகு முதல்வர் விஜய் தனது உத்தரவை முழுமையாக வெளியிட்டார்.
ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ததற்கு முதல்வர் விஜய்க்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நன்றி தெரிவித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட இருப்பதால், முதல்வருக்கு ஆசிரியர் தின வாழ்த்தையும் தெரிவித்தார் அமைச்சர் ராஜ்மோகன்.
முதல்வரின் இந்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:
* சிதம்பரம் கோயிலை சுற்றி 36 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும்.
* கடலூர் மாவட்டத்தில் உள்ள புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.
* கன்னியாகுமரி கடற்கரையை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை பல்வேறு நவீன வசதிகளை செய்து கொடுக்க ரூ. 50 கோடி செலவிடப்படும்.
* திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் திடக் கழிவில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
*நகராட்சிகளில் சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.1,850 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மதுரை மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.
ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்யும் அறிவிப்பு 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தது உள்நோக்கம் கொண்டது என திமுக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க யார் மீதும் வழக்கே போட மாட்டீர்களா என்று கேள்வியும் அவர் எழுப்பியுள்ளார்.