

தமிழக சட்டசபையில் சமூக நீதித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். இதனையடுத்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய சட்டசபையில் விலைவாசி உயர்வு, காவல் துறை மரணங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினர்.
விலை வாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் இபிஎஸ். விலைவாசி உயரும் போது, எந்த மாநிலத்தில் குறைவாக உள்ளதோ, அங்கு வாங்கி கூட்டுறவுத் துறை அல்லது ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என இபிஎஸ் அறிவுரைத்துள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “கடந்த 2007-ல் தேசிய அளவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி சிறப்பு விநியோகத் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய் மற்றும் ரவை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் சந்தை விலையை விடவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது தவிர கடுகு, சீரகம் உள்ளிட்ட 10 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.50-க்கு வழங்கினார்கள்.
இந்த திட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. ரேஷன் கடையில் வழங்கப்படும் சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவை பொதுமக்களுக்கு சற்று கூடுதலாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “அரிசி, மிளகாய், புளி, எண்ணெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எங்களுடைய ஆட்சியில் எந்த மாநிலத்தில் விலை குறைவாக உள்ளதோ அந்த மாநிலத்திற்கு சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்தோம். அதேபோல் தபிழக அரசு இப்போதும் செய்தால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தலாம்” என இபிஎஸ் சிறப்பான ஐடியாவை வழங்கினார்.
பாமக எம்எல்ஏ கணேஷ் குமாரும் விலைவாசி உயர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கூறுகையில், “அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கவலையை அளிக்கிறது. இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதைப் போல, மாதந்தோறும் ரேஷன் கடையில் அத்யாவசிய மளிகை தொகுப்பு வழங்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்தார் உணவு துறை அமைச்சர் வெங்கட ரமணன். அவர் கூறுகையில், “41 அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. இதனால் தான் அத்தியாவசிய பொருட்கள் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. இதனைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.