

பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners), தங்களது ஓய்வூதியத்தை தங்கு தடையின்றி தொடர்ந்து பெற ஒவ்வொரு ஆண்டும் உயிர் சான்றிதழை (Digital Life Certificate - DLC/ Jeevan Pramaan) சமர்ப்பிக்க வேண்டும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் முறையில் இதனை எளிதாகச் சமர்ப்பிக்க அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியள்ளது. அதாவது நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் உயிர் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை பதிவு வழியே, கிராமங்களில் உள்ளவர்களும், தொலைதுார பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் கடைசியாகச் சான்றிதழ் சமர்ப்பித்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, கடந்தாண்டு அக்டோபர் 20-ம்தேதி ஜீவன் பிரமாண் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தொடர்ந்து ஓய்வூதியம் பெற நடப்பாண்டில் அக்டோபர் 19-ம்தேதிக்குள் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகும் சமர்ப்பிக்கலாம் என்றாலும், தாமதமாகும் நாட்களுக்கு ஏற்ப ஓய்வூதியம் பெறுவதிலும் தாமதம் ஏற்படக்கூடும்.
ஓய்வூதியம் தடையின்றித் தொடர்ந்து கிடைக்க, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த உயிர் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர் சான்றிதழை (DLC) சமர்ப்பிக்க உதவும் முக்கிய வழிகள்:
* ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ‘ஜீவன் பிரமாண் செயலி’ (Jeevan Pramaan App) மற்றும் 'AadhaarFaceRD' செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு பயோமெட்ரிக் சாதனங்கள் தேவையில்லை.
* இந்திய அஞ்சல் துறை (India Post Payments Bank - IPPB) தபால்காரர்கள் மூலம் வீட்டிற்கே வந்து பயோமெட்ரிக் முறையில் Doorstep Banking via Post Info App) உயிர் சான்றிதழ் வழங்கும் சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.
* பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு (DSB Alliance) மூலமாகவும், நியமிக்கப்பட்ட முகவர் வீட்டிற்கு (Doorstep Banking Services) வந்து இந்த சேவையை வழங்குமாறு முன்பதிவு செய்ய முடியும்.
* அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC) அல்லது இ-சேவை மையங்கள் மூலமும் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது விழித்திரை) சரிபார்ப்பு மூலம் இதனைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம் வாங்க...
1. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) மூலம் வீட்டு வாசலில் சேவை:
இந்திய அஞ்சல் துறை தனது India Post Payments Bank (IPPB) மூலம் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே வந்து உயிர்ச் சான்றிதழ் வழங்கும் சேவையை வழங்குகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல்எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
அதாவது, உங்கள் பகுதி தபால்காரர் (Postman) அல்லது கிராமின் தக் சேவக் உங்கள் வீட்டிற்கே நேரடியாக வருவார். அவர் கொண்டு வரும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் கைவிரல் ரேகை அல்லது முக அங்கீகாரப் பதிவு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வீட்டு வாசலுக்கான சேவைக்கு ரூ. 70 மட்டும் (ஜிஎஸ்டி உட்பட) தபால்காரரிடம் சேவை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அல்லது 'PostInfo' மொபைல் செயலி (App) மூலமாகவோ அல்லது தபால் துறை இணையதளம் வாயிலாகவோ இந்தச் சேவைக்கான கோரிக்கையை (Service Request) விடுக்கலாம்.
மேலும், தபால் ஆபிஸ் வீட்டு வாசல் வங்கிச் சேவைக்கு 033-22029000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டும் முன்பதிவு செய்யலாம்.
2. ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) மொபைல் செயலி :
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தியே நேரடியாக டிஜிட்டல் முறையில் உயிர்ச் சான்றிதழை உருவாக்கலாம்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், நல்ல இணைய வசதி மற்றும் ஆதார் முக அங்கீகாரத்திற்காக (Face Authentication) கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து AadhaarFaceRD செயலியைப் பதிவிறக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ Jeevan Pramaan Website பக்கத்தில் இருந்து 'Jeevan Pramaan' செயலியைப் பதிவிறக்கி, உங்கள் போன் முன்பக்க கேமரா மூலம் முகத்தை ஸ்கேன் (Biometric Face Scan) செய்து சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
3. பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு (PSB Alliance) சேவை :
பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணைந்து மூத்த குடிமக்களுக்காக Doorstep Banking Services (DSB) என்ற திட்டத்தை வழங்குகின்றன.
இதற்கென உள்ள பிரத்யேக மொபைல் செயலி அல்லது டோல்-ப்ரீ எண் மூலமாக உங்கள் வங்கிக்கு வீட்டுச் சேவைக்கான முன்பதிவு செய்ய வேண்டும்.
வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் உங்கள் வீட்டிற்கு வந்து பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்ச் சான்றிதழைப் பெற்று ஆன்லைனில் புதுப்பிப்பார்.
உமாங் செயலி மூலமாகவும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமர்ப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் மற்றும் விவரங்கள் :
ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
ஓய்வூதிய வகை
ஓய்வூதிய கொடுப்பனவு ஆணை எண் (PPO Number)
ஓய்வூதிய கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு)
ஓய்வூதிய அனுமதி வழங்கும் அதிகாரியின் பெயர்
ஓய்வூதியம் வழங்கும் நிறுவனம் அல்லது ஏஜென்சியின் பெயர் (Pension Disbursing Agency)
இந்த மூன்று முறையில் ஏதேனும் ஒருமுறை மூலம் உங்களுடைய சான்றிதழ் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு Pramaan ID உடன் கூடிய உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.
மத்திய அரசு ஓய்வூதியர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழியே ஓய்வூதியம் பெறுவோர், மாநில அரசு ஓய்வூதியர்கள், ராணுவ ஓய்வூதியர்கள் மற்றும் இதர ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.