

இந்தியாவில் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்வோம். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமுடன் வெடிக்க வேண்டும் என அரசு தரப்பில் ஆண்டுதோறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட கவனக் குறைவால் சிலர் பட்டாசு விபத்தில் சிக்கி விடுகின்றனர்.
ஒருசிலர் சாகசம் செய்கிறேன் என்று கையிலேயே பட்டாசை வெடிக்கிறார்கள். ஆனால் இப்படி கவனக் குறைவாக இருப்பதும், சாகசம் செய்வதும் ஆபத்தானது. பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.
பண்டிகை நேரத்தில் பட்டாசு விபத்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால், அது நம்மை மட்டுமல்ல குடும்பத்தையே பாதிக்கும். ஒருவேளை பட்டாசு விபத்து ஏற்பட்டு மருத்துவனையில் சிகிச்சை எடுக்கும் சூழல் வந்தால், அது நிச்சயமாக நமக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கி விடும்.
இப்படியான நிதி நெருக்கடியில் வாடிக்கையாளர்கள் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே, ஃபோன்பே (Phonepe) நிறுவனம், ஆதித்யா பிர்லா நிறுவனத்துடன் இணைந்து ‘Firecracker Insurance’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் பதிவு செய்தால் வெறும் 11 ரூபாயில் ரூ.25,000 வரை காப்பீடு கிடைக்கும்
2 வகையான பிரீமியம்:
11 நாட்கள் மற்றும் 30 நாட்கள் வரை செயலில் இருக்கும் 2 வகையான காப்பீட்டுப் பிரீமியம் திட்டத்தை ஃபோன்பே வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
11 நாட்கள்:
வெறும் 11 ரூபாயில் 11 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 5 முதல் 15-ம் தேதி வரை இந்தக் காப்பீடு செயலில் இருக்கும்.
30 நாட்கள்:
வெறும் 21 ரூபாயில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் நவம்பர் 14-ம் தேதி வரை இந்தக் காப்பீடு செயலில் இருக்கும்.
காப்பீட்டின் பலன்கள்:
2 வகையா காப்பீட்டுத் திட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பலன்கள் தான் கிடைக்கும். செல்லுபடியாகும் நாட்கள் தான் வேறு. Firecrackers Insurance திட்டத்தில் பாலிசிதாரர், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு காப்பீடு கிடைக்கும்.
மருத்துவமனை செலவு:
தீபாவளி பண்டிகையில் பட்டாசு விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால், ரூ.25,000 வரை காப்பீடு வழங்கப்படும்.
பகல்நேர சிகிச்சை:
பட்டாசு விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு குறைவாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டாலும், ரூ.25,000 வரை காப்பீடு வழங்கப்படும்.
மரணம் நிகழ்ந்தால் காப்பீடு:
யாரும் எதிர்பாரா விதமாக பட்டாசு விபத்தில் பாலிசிதாரர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்தூற்கு ரூ.25,000 காப்பீடு வழங்கப்படும். இந்தப் பலன் பாலிசிதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
காப்பீடு எடுப்பது எப்படி?
* ஃபோன்பே வாடிக்கையாளர்கள், முதலில் செயலியில் உள்ள இன்சூரன்ஸ் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
* Firecrackers Insurance என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* இப்போது பாலிசிதாரரின் பெயர், வயது மற்றும் மெயில் ஐடியை உள்ளிட வேண்டும்.
* அடுத்ததாக மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரை உள்ளிட வேண்டும்.
* நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்கு ஏற்ப ரூ.11 அல்லது ரூ.21 பிரீமியத்தை செலுத்தி காப்பீடு எடுக்கலாம்.
தொடர்ந்து 3வது ஆண்டாக பட்டாசு விபத்துக் காப்பீட்டை ஃபோன்பே நிறுவனம் கொண்டு வந்துள்ளது. பண்டிகை காலங்களில் ஏற்படும் அசம்பாவிதத்தில், நிதி நெருக்கடியில் சிக்குவதைத் தடுக்க இந்தக் காப்பீடு உதவும்.