

உலக அளவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் வழியாக ஆன்லைன் பண மோசடிகள் நடப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலிகள் வழியாக பகுதி நேர வேலை என்ற பெயரில் பண மோசடி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி வருகின்ற ஜனவரி 1 2027 முதல், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் எண்ணுக்குரிய சிம் கார்டு மொபைலில் இருக்க வேண்டியது அவசியம். அப்படி சிம் கார்டு இல்லையெனில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகிய 2 செயலிகளும் செயல்படாது.
இந்தப் புதிய விதியின் மூலம் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவர். இருப்பினும் சமூக வலைதளங்கள் வழயாக நடக்கும் சைபர் கிரைம் மோசடிகளைத் தடுக்க இந்த விதி அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலமாகத் தான் மோசடிகள் நடக்கின்றன. இந்நிலையில் தற்போது அமலுக்கு வர இருக்கும் புதிய விதியின் படி, சைபர் கிரைம் மோசடிகள், போலி கணக்குகள் மற்றும் இந்திய மொபைல் எண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
யுபிஐ செயலிகள் போலவே இனி வாட்ஸ்அப்பும் செயல்படும். யுபிஐ செயலிகளில் பண மோசடியைத் தடுக்க, வங்கியில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு போனில் இருந்தால் மட்டுமே யுபிஐ செயலிகள் செயல்படும் வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்நிலையில் இதே விதி தான் தற்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மொபைலில் இருந்து வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட சிம் கார்டை நீக்கினால், யுபிஐ செயலிகள் செயல்படாது. அதேபோல் இனி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளும் செயல்படாது. இதன்மூலம் போலியான பல கணக்குகளுக்கு முடிவு கட்டப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் பாதிப்பு?
* வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் பதிவு செய்த சிம் கார்டை போனில் இருந்து நீக்கியவர்களுக்கு இந்த விதி பாதிப்பை ஏற்படுத்தும்.
* வாட்ஸ்அப்பில் பயன்படுத்தும் சிம் கார்டு காலாவதியாகி விட்டாலோ அல்லது ரீசார்ஜ் செய்யாமல் முடக்கப்பட்டிருந்தாலோ இனி அந்த எண்ணில் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்படாது.
* பிரதான மொபைலில் உள்ள சிம் கார்டை வைத்து வேறொரு மொபைலில் ‘Linked Device’ அல்லது தனி செயலியாக வைஃபை வசதியுடன் வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
* ஆன்லைன் வழியாக தற்காலிக மொபைல் எண்களை வாங்கி, டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் கணக்குகள் முடக்கப்படலாம்.
வாட்ஸ்அப் வெப் செயல்படுமா?
பொதுவாக வாட்ஸ் அப்பை மொபைல் போனில் பயன்படுத்துவது போலவே, கணினியிலும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம். ஒருமுறை ஸ்கேன் செய்துவிட்டால் வாட்ஸ்அப்பை பலமுறை நாம் கணினியில் வாட்ஸ்அப் வெப் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்த சிம்கார்டு மொபைலில் இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டிருப்பதால், வாட்ஸ்அப் வெப்பில் இந்த விதி எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கணினியில் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்துவதால் சைபர் கிரைம் மோசடியில் சிக்க நேரிடும் என்ற எச்சரிக்கைகள் ஏற்கனவே வந்துள்ளன. இந்நிலையில் இனி வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தும் போதெல்லாம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
வாட்ஸ்அப் கணக்கை செயலில் வைத்திருக்கவே சிம் கார்டுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.