

உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜிம் எனப்படும் உடற்பயிற்சி கூடங்கள் தற்போது எங்கும் பரவியுள்ளது. இந்நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தவர் உயிரிழந்தார் எனும் செய்தி மக்களிடையே குறிப்பாக ஜிம் செல்லும் இளையோரிடையே அதிர்ச்சியை அளிக்கிறது.
அசாம் மாநிலம் நாகான் (Nagaon) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியரான 47 வயதுடைய டாக்டர் ஷாஹீன் ரஹ்மான் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் தனது வழக்கமான உடற்பயிற்சியின் போது மாலை 7:36 மணியளவில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்த சக நபர்களால் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது மாரடைப்பு (Cardiac arrest) காரணமாக இருக்கலாம் என அஞ்சப்பட்டாலும், அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உடற்பயிற்சி செய்வது பொதுவாக ஆரோக்கியமான இதயம், வலுவான தசைகள் மற்றும் சிறந்த ஒட்டுமொத்த உடற்தகுதியுடன் தொடர்புடையது. ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், தீவிரமான உடல் உழைப்பு, உள்ளுக்குள் இருக்கும் இதயப் பிரச்சனையை வெளிக்கொணர்ந்து, பேரழிவாக எதிர்பாராத உயிரிழப்பில் முடியக்கூடும் எனக் கருதப்படுகிறது.
அசாமில் மருத்துவர் உடற்பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் இதுதான் நிகழ்ந்துள்ளது. தீவிர உடற்பயிற்சிகளின்போது ஏற்படும் திடீர் இதய அவசரநிலைகள் குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
பல அறிக்கைகளின்படி உடற்பயிற்சி கூடத்தில் சரிந்து விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டடாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் மாரடைப்பால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.
இதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று வழக்கமான உடற்பயிற்சி ஆகும். இது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, உடல் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இருப்பினும் உடற்பயிற்சிக் கூடங்களில் இதய அவசரநிலைகள் காரணமாக ஏன் இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று தற்போது மருத்துவர்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் 35,715 பேர் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் சுமார் 40% பேர் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அப்போலோ மருத்துவர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீவிர உடற்பயிற்சியின் போது, உடலில் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜனுக்கான தேவை ஆகியவை அதிகரிக்கின்றன. ஒருவருக்குக் கண்டறியப்படாத இதயப் பிரச்சினை இருந்தால், தேவையில் ஏற்படும் அந்தத் திடீர் அதிகரிப்பு, அரிதான சூழ்நிலைகளில், ஒரு அபாயகரமான இதயத் துடிப்பு ஒழுங்கின்மையையோ அல்லது பிற தீவிரமான இதய நிகழ்வையோ தூண்டக்கூடும் என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
திடீர் இதய நிகழ்வுகளின் மிக மோசமான அபாயங்களில் ஒன்று, அவை ஆரோக்கியமாகத் தோற்றமளிக்கும் நபர்களுக்கும் ஏற்படக்கூடும் என்பதுதான். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட ஒருவருக்குக் கூட உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பரம்பரை இதயக் கோளாறு அல்லது இதயத் துடிப்புப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.
புகைப்பிடித்தல், நீரிழிவு நோய், அதிக கொலஸ்ட்ரால், நாள்பட்ட மன அழுத்தம் , போதுமான தூக்கமின்மை மற்றும் குடும்பத்தில் பரம்பரையாக இதய நோய்கள் இருப்பது போன்ற காரணிகளாலும், ஆபத்து பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மன அழுத்தமான நீண்ட நேரங்களில் பணியாற்றுவதாலும், சீரற்ற தூக்க முறையைக் கொண்டிருப்பதாலும், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் கூடுதல் அபாயத்தை எதிர்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.
உடற்பயிற்சி செய்யும் போது மார்பில் அழுத்தம், வலி அல்லது இறுக்கம், விவரிக்கப்படாத கடுமையான மூச்சுத்திணறல், மயக்கமடையும் நிலை, திடீர் தலைச்சுற்றல், புதிய அல்லது வழக்கத்திற்கு மாறான சீரற்ற இதயத் துடிப்பு, உடற்பயிற்சிக்குச் சற்றும் பொருந்தாதது போல் உணரும் அதீத பலவீனம்.கை, தாடை, முதுகு அல்லது தோள்பட்டைக்கு பரவும் வலி ஆகிய அறிகுறிகள் சிறியதாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யாமல் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
திடீர் மாரடைப்பு காரணமாக ஒருவரின் இதயம் திடீரென இயங்குவதை நிறுத்தும்போது, அவரது இதயத் துடிப்பை மீண்டும் சீராக மாற்ற மின்சார அதிர்ச்சியைத் (Shock) அளிக்கப் பயன்படும் சிறிய கருவியான ஏஇடி (AED) உடற்பயிற்சிக் கூடத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டு வைப்பது முக்கியம். இந்த இயந்திரத்தின் மூலம் இதயத்துக்கு அனுப்பப்படுகிற மின்னதிர்வால் இதயத் துடிப்பு சீராகும். இதன் மூலம் அவர்களை மரணம் ஏற்படாத வகையில் தற்காத்து மருத்துவமனைக்குக் கொண்டு வர இயலும்.
மேலும் மார்பின் மையப்பகுதியில், நிமிடத்திற்கு 100–120 முறை வேகமாக கைகளால் மட்டுமே செய்யப்படும் சிபிஆர் முதலுதவியையும் தெரிந்து வைத்திருப்பதும் இது போன்ற அவசர நிலைகளில் உயிர் பறிபோவதை தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.