
‘காதல்’ - இன்றைய பல இளைஞர்களை சீரழிக்கும் விஷயம். அறியாத வயதில் காதல் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து அலைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். இளம் வயதில் காதல், கள்ளகாதல் தான் தற்போது நாடு முழுவம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.
மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது, கணவன் இருக்கும் போதே வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது என்று நாங்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை பெண்களும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் சிலர் ஒருபடி மேலே போய் காதல் மற்றும் கள்ளக்காதலுக்காக கொலை செய்யவும் தயங்குவதில்லை. உடல் இச்சைக்கு அடிமையானவர்கள் கொலை செய்த பின்னர் தங்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை சிந்திப்பதில்லை. அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் கேரளா மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. காதலனை, காதலியே தீர்த்துக்கட்டிய இந்த சம்பவம் கேரளா - குமரியை உலுக்கியது.
கேரளா பாறசாலையை சேர்ந்த ஜெயராஜ் - பிரியா என்பவரின் மகன் ஷாரோன்ராஜ். 23 வயதான இவருக்கும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் ஜோடி பல இடங்களுக்கு பைக்கில் சென்று காதல் வானில் சிறகடித்து பறந்தது.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி ஷாரோன்ராஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் 25-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஷாரோன்ராஜ் சாவில், அவனது காதலி கிரீஷ்மா மீது சந்தோகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காதலி கிரீஷ்மாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து தீர்த்துக்கட்டியதும் அதனால் ஷாரோன்ராஜின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் பரவி அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
கிரீஷ்மாவுக்கு திருமணம் செய்ய அவளது பெற்றோர் வசதி படைத்த ராணுவ வீரரை பார்த்துள்ளனர். வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கிரீஷ்மா காதலனை எப்படியாவது கழற்றி விட முடிவெடுத்தார். ஆனால் ஷாரோன்ராஜ், கிரீஷமாவை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு காதலிக்கும் போது சேர்ந்து எடுத்த வீடியோ, புகைப்படங்களை ஷாரோன்ராஜ், ராணுவ வீரரிடம் காட்டினால் வசதியான வாழ்க்கை பறிபோகும் என்பதால் எந்த தடயமும் இன்றி காதலனை கொலை செய்யும் முடிவை கிரீஷ்மா எடுத்துள்ளார். இறுதியாக 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி காதலனை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கிரீஷ்மாவை கைது செய்த போலீசார் அவருக்கு துணையாக இருந்த அவளது தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமாரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காதலை துண்டிக்க, அவரை விஷம் கொடுத்து கொலை செய்வது இந்த சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்பதால் ஷாரோன்ராஜை கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியான கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி எம்.எம்.பஷீர் தீர்ப்பளித்தார்.
கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு கோர்ட்டுக்கு வெளியே வந்த ஷாரோன்ராஜின் தாய் தீர்ப்பு எங்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளதாகவும், தீர்ப்பளித்த நீதிபதிக்கு நன்றி என்றும் கண்ணீருடன் கூறினார்.
இந்த தீர்ப்பு தவறு செய்யும் பெண்களுக்கு தகுந்த பாடமாக இருக்கும். யார் தவறு செய்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.