

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘இன்ஸ்பயர்-எஸ்.எச்.இ’ (INSPIRE-SHE) உதவித்தொகை திட்டத்தை புதிய விதிமுறைகள் மற்றும் மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
அறிவியல், இயற்கை அறிவியல் சார்ந்த கல்லூரி படிப்புகளில் சேரும் 12,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் ரூ.60,000 உதவித்தொகை வழங்கும் ‘இன்ஸ்பயர்-எஸ்.எச்.இ’ (INSPIRE-SHE - Scholarship for Higher Education) திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் புதிய திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முதலாமாண்டில் அரியர் வைத்தாலோ, 60%-க்கும் குறைவான மார்க் அல்லது 7 CGPA-க்கு குறைவாக இருந்தால் உதவித்தொகை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பாடங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ‘இன்ஸ்பயர்-எஸ்.எச்.இ’ (INSPIRE-SHE - Scholarship for Higher Education) கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் அடிப்படை மற்றும் இயற்கை அறிவியல் (Basic and Natural Sciences) பாடங்களைப் பயிலத் திறமையான மாணவர்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று அறிவியல் மற்றும் இயற்கை அறிவியல் சார்ந்த இளங்கலை (B.Sc., B.S.), முதுகலை (M.Sc., Integrated M.Sc./M.S.) படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியும். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 12,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் ஆண்டுக்கு ரூ.60,000 கல்வி உதவித்தொகையும், ஆராய்ச்சி வழிகாட்டுதலுக்காக (Mentorship Grant)ஆண்டுக்கு ரூ.20,000-ம் வழங்கப்படுகிறது. உதவித்தொகை நேரடியாக மாணவரின் பெயரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் செலுத்தப்படும்.
இன்ஸ்பயர் உதவித்தொகை தகுதிகள் :
* விண்ணப்பதாரர்கள் 17 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தந்த மாநில அல்லது மத்திய கல்வி வாரியங்களில் முதல் 1% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது JEE Main, JEE Advanced, NEET ஆகிய தேர்வுகளில் முதல் 10,000 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், புள்ளியியல், நிலவியல், வானியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட 18 அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் பயில வேண்டும். பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளுக்கு இது பொருந்தாது.
* NTSE, JBNSTS மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் பதக்கம் வென்றவர்களும், IISER, NISER போன்ற நிறுவனங்களில் சேர்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
2025-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான INSPIRE-SHE விண்ணப்பப் பதிவு நவம்பர் 7, 2026 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7, 2026 கடைசித் தேதியாகும்.
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி (Integrated M.Sc) மற்றும் பி.எஸ்-எம்.எஸ் (BS-MS) படிப்புகளில் சேரும் முதல் 1% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்நிலையில் ‘இன்ஸ்பயர்-எஸ்.எச்.இ’ உதவித்தொகை வழங்கும் முறையில் அறிவியில் மற்றும் தொழில்நுட்பத்துறை புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய விதிமுறையின்படி, ஒரு மாணவர் கல்வியாண்டில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தாலோ அல்லது தேர்வைத் தவறவிட்டாலோ உதவித்தொகை உடனடியாக ரத்து செய்யப்படும். படிப்பின் போது இடையில் இடைவெளி (Break/Gap year) எடுக்கும் மாணவர்கள் இத்திட்டத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
அடுத்து ஆண்டில் தேவையான கல்வித்தகுதியை பெற்றால் மீண்டும் உதவித்தொகையை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் புதிய வழிகாட்டுதலின்படி முதல் ஆண்டில் 60 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் அல்லது 7 CGPA-வுக்கும் (மதிப்பெண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒட்டு மொத்த தரப்புள்ளி சராசரி) குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற முடியாத நிலை ஏற்படும்.
மேலும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் உதவித்தொகை நிறுத்தப்படும். இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டுதல் தொகையை இழக்கநேரிடும்.
இதுவரை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.20,000 ஆராய்ச்சி வழிகாட்டுதல் தொகையும் மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த தொகை 3-வது மற்றும் 4-வது ஆண்டுகளில் மட்டுமே வழங்கப்படும். வழங்கப்படும். இதன் மூலம் மொத்த மானியத் தொகை ரூ.40,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆண்டுகளில் மாணவர் பெறக்கூடிய அதிகபட்ச உதவித்தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.3.4 லட்சமாக குறைகிறது.
இதுவரை ஒவ்வொரு பள்ளி வாரியத்துக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உதவித்தொகைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது.
இனி ஒவ்வொரு பள்ளி வாரியத்திலும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உதவித்தொகைக்கான இடங்கள் ஒதுக்கப்படும்.
இதனால் சில மாநிலங்களில் இந்த உதவித்தொகையை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.