

இன்று சட்டமன்றத்தில் திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட பரபரப்பான சூழலில் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து தவெக மற்றும் திமுகவை கடுமையாக விளாசி உள்ளார். திமுக மற்றும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி, பதில் சொல்லி சட்டமன்றத்தின் நேரத்தினை வீணடிக்கின்றனர். இதனால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர் , "ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர் ஒருவர் தினமும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை திமுக மீது கூறி ஆரம்பிக்கிறார். அதை தொடர்ந்து திமுகவினர் அதற்கு பதில் அளிக்க பிரச்சனை உருவாகிறது. இப்படி தினமும் சட்டமன்றம் நடைபெறும் 10 மணி நேரத்தில் 7 மணி நேரம் , ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டினை சுமத்தி, சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தினை வீணாக்கி விடுகின்றனர். இதனால் , சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு வெறும் 3 மணி நேரமே கிடைக்கிறது.
இவர்கள் நேரத்தினை வீணடிப்பதால், எங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தாலும் நாங்கள் கூறும் கருத்துக்களை அமைச்சர்கள் ஏற்பதாகவும் இல்லை, அதற்குரிய பதிலையும் சொல்வதும் இல்லை. எங்கள் வரிசையில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி பிரச்சனைகளை பேசுகிறார்கள் .
பல துறை சார்ந்த அமைச்சர்கள் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்கள் பெரும்பாலும் தங்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் கூறுவது இல்லை. பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கியமான மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதில் கூறுகிறார்கள். இதனால், சட்டமன்றத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது," என்று பழனிச்சாமி கூறினார்.
மேலும் , முதலமைச்சரின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு நான் கேள்விகளை எழுப்பினேன். நான் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை அளிக்கவில்லை, அவர் மேலோட்டமாக பதில் அளிக்கிறார். ஆனால், 45 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஊழலை வைத்து எதிர்க்கட்சியின் மீது குற்றம் சுமத்துகிறார். அது பற்றி முன்பே பலமுறை பேசி பேசி களைத்து போய்விட்டது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்த 4 மாதங்களில் மட்டும் ₹34,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் , போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மின்சார கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தவெகவின் ஆட்சியை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக கூறுகிறார். கூட்டணி கட்சிகளே விமர்சிக்கும் நிலையில் இந்த ஆட்சி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டியுள்ளது. அண்ணா உள்பட பல தலைவர்களும் இந்த தலைமைச் செயலகத்தில் இருந்து தான் ஆட்சி செய்துள்ளனர். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு என்ன அவசியம் உள்ளது? ஏற்கனவே அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பொழுது புதிய திட்டங்களுக்கு நிதி எங்கே இருக்கிறது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
குதிரை பேரம் மூலமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்க வைத்துள்ளது தவெக அரசு. இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முக்கிய காரணமே தவெக தான். ஏற்கனவே இந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று இருப்பதால் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் கட்டாயம் வெற்றி பெறுவார்கள். இந்த அரசாங்கம் 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.