

உலகம் முழுவதும் பருவகால மாற்றத்தினால் கோடை வெயில், பருவமழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவற்றில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது எல் நினோ பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
எல் நினோ தாக்கம் அதிகரித்திருப்பதால், கோடை காலம் முடிந்த பிறகும் கூட, கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதிகப்படியான வெப்பத்தினால், ஏரிகளில் உள்ள தண்ணீர் ஆவியாகிக் கொண்டே போகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 9.1 டிஎம்சி தண்ணீர் இருந்தது. ஆனால் நடப்பாண்டு 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய சென்னைக்கு மட்டும் 1 மாதத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.
இந்நிலையில் பருவமழை தாமதமானால், சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக தற்போது பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டை விடவும் 2027-ல் அதிக வெப்பம் நீடிக்கும் என சில நாட்களுக்கு முன்பே உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதுமட்டுமின்றி எல் நினோ தாக்கத்தால் சில நாடுகளில் கடுமையான வெப்பம் மற்றும் சில நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த எல் நினோ விளைவால் இந்தியாவில் மட்டும் சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் கூடும் எனவும், உலகளவில் இந்த எண்ணிக்கை 4.5 லட்சத்தைத் தாண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகள் வந்து கொண்டே இருக்கும் சூழலில், அடுத்ததாக தண்ணீர் தட்டுப்பாடு குறித்த எச்சரிக்கையும் வந்து விட்டது.
கடுமையான வெயில் ஒருபுறம் இருக்க, இதனால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் பருவமழை மட்டும் தாமதமானால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக சென்னை மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுவது உறுதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள 92 அணைகளில் 87.25% ஆக இருந்த நீர் இருப்பு தற்போது 50%-க்கும் குறைவாக இருப்பதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் முக்கிய அணைகளில் 70% நீர் இருப்பு மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் 62% ஆகவும், கிழக்கு மாநிலங்களில் 73% ஆகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுளில் இந்த அளவுக்கு நீர் இருப்பு சரிந்திருப்பது இதுவே முதல்முறை. பருவமழை 23% குறைந்ததே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், முடிந்த வரையில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதே நல்லது. மேலும் தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வுகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.
சூப்பர் எல் நினோ விளைவு குறித்து ஆராய தமிழ்நாட்டில் 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆராய்ந்து அளித்த தகவல் படி, நடப்பாண்டைக் காட்டிலும் அடுத்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இப்போதே பல ஏரிகளில் தண்ணீர் குறைவாக இருக்கும் சூழலில், அடுத்த ஆண்டில் நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது. பருவமழை மட்டும் குறைந்தால், தமிழ்நாட்டில் இதன் தாக்கம் பலமடங்கு அதிகமாக இருக்கும்.