

உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 29) சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது மாரத்தான் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தனியார் மருத்துவமனை சார்பில் 10 கி.மீ. மாரத்தான் போட்டி நடைபெற்றது. கந்தப் போட்டியில் சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3 வயது சிறுமி வர்ஷா பந்தய தூரத்தை முழுமையாக கடந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதய ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக நடந்த மாரத்தான் போட்டியில் தனது தந்தையுடன், வர்ஷா என்று சிறுமியும் ஓடினார். சிறுமிக்குத் துணையாக வர்ஷாவுடன் ஓடி வந்தார் அவருடைய தந்தை.
தந்தையுடன் இணைந்து 3 வயது சிறுமி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடியோ வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக மாரத்தான் போட்டிகளை 3 வகையாக நடத்தப்படும். 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என வயதுக்கு ஏற்ப 3 வகையான போட்டிகள் நடக்கும். இதில் 10 கி.மீ., 21 கி.மீ. (Half Marathon) மற்றும் 42 கி.மீ. (Full Marathon) என வயதுக்கு ஏற்ப ஓடும் பந்தய தூரமும் வேறுபடும்.
நெல்லையில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டி விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டதால், 10 கி.மீ. பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது. பயிற்சி இல்லையென்றால் இது மாதிரியான போட்டிகளில் கலந்து கொள்வது கூட கடினமாக இருக்கும். அப்படி இருக்கையில் 3 வயதே நிரம்பிய சிறுமி 10 கி.மீ மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது மட்டுமின்றி, பந்தய தூரத்தையும் முழுமையாக ஓடி கடந்துள்ளார்.
சிறுமி வர்ஷாவின் இந்த ஓட்டத்திற்கு முக்கிய காரணமே அவருடைய தந்தை தான். தந்தை கொடுத்த ஊக்கத்தில் சின்னஞ்சிறு சிறுமி மாரத்தானில் ஓடியிருக்கிறார்.
சிறுமி வர்ஷா, தந்தையுடன் ஓடும் அந்தக் காட்சியைக் காண்பதற்கே மிக அழகாக இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு தந்தையின் துணை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
அதோடு இப்போதே குழந்தைகளுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிப்பதன் மூலம், வருங்காலத்தில் அவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு விளையாட்டு மிகவும் அவசியம்.
இப்போதே விளையாட்டின் முக்கியத்துவத்தை குழந்தைகள் உணர்ந்து விட்டால், தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்புகளே இருக்காது. அவ்வகையில் நெல்லையில் இன்று நடந்த விழிப்புணர்வு மாரத்தான் இதய பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் தான்.