

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில், இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து 3 அமைச்சர்களை மாற்ற தவெக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்படி புதிய அமைச்சரவைப் பட்டியலில் மதுரை மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமைச்சரவை மாற்றம் மட்டுமின்றி இலாகா மாற்றமும் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய் வசமிருக்கும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அமைச்சர் ராஜ்மோகனுக்கு வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் அக்டோபர் 6-ம் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இது தவிர மேலும் 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இடைத்தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்கு முன்னதாகவே அமைச்சரவையில் மதுரை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தவெக நிர்வாகிகள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பதவியை இழக்கப்போகும் அந்த மூன்று அமைச்சர்கள் யார் யார் மற்றும் புதிதாக அமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் யார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அமைச்சர் சரத்குமார், ஜெகதீஸ்வரி மற்றும் தமிழன் பார்த்திபன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடைத்தேர்தலுக்கு பின்பே வெளியாகும்.
மதுரையில் முதல்வர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் தொடக்கத்தில் இருந்தே பணியாற்றி வந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பொதுவாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே அமைச்சரவையில் ஆளும் கட்சி மாற்றத்தைக் கொண்டு வரும். கட்சியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், இந்த அமைச்சரவை மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கமானது தான். ஆனால் பதவி ஏற்ற ஐந்து மாதங்களுக்குள்ளாகவே அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர தவெக அரசு முடிவு எடுத்துள்ளது.
காங்கிரஸில் 2, விசிக 1, ஐயூஎம்எல் 1 என 4 கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது. தவெக சார்பில் அமைச்சராக பதவியேற்ற 31 எம்எல்ஏக்கள் இடையே தான் அமைச்சரவை மாற்றத்தைக் கொண்டு வர தவெக தலைமை முடிவெடுத்துள்ளது.