

‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா உட்பட உலகம் முழுவதும் பருவகால சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு இந்தாண்டு ‘எல் நினோ’ வறட்சியை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழையானது, தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது. இங்குள்ள அணைகள், பாசன ஏரிகள் நிரம்பாமலேயே இருக்கின்றன.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை இந்த காலகட்டத்தில் கேரளாவில் மிகப்பெரிய அளவில் பொழியும். அதன் தாக்கம் கேரள எல்லையோர தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். ஆனால், இந்தாண்டு கேரளாவில் பெரியளவு தென்மேற்கு பருவமழை பொழியாத நிலையில் அதன் தாக்கம் தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் எதிரொலித்துள்ளது.
அதே சமயத்தில் கர்நாடகாவிலும் பருவ மழை குறைவு என்பதால், காவிரி நீர் திறந்து விட முடியாத நிலைக்கு கர்நாடக அரசும் தள்ளப்படுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால், இந்தாண்டு கோடை காலத்தில் மழை எட்டிக்கூட பார்க்கவில்லை.
‘எல் நினோ’ தீவிரமடையும் ஆண்டுகளில், தென்மேற்கு பருவமழை குறைந்து இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வறட்சி அபாயம் :
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நீர்வளத்துறையின் கீழ் மொத்தம் 90 அணைகள், 14,141 ஏரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தமிழ்நாட்டின் அணைகளில் தற்போது 71.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணைகளின் நிலையே பரிதாபமாக உள்ள நிலையில் ஏரிகளின் நிலை அதைவிட பரிதாபமாக உள்ளது. அதாவது, 14,141 பாசன ஏரிகளில் ஏற்கனவே 3,483 பாசன ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில் 6,127 ஏரிகள் வறண்டு விடும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப்போல, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் கடுமையான அளவில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தாண்டு ‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றத்தால், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதற்கு இன்னும் 3 மாதங்கள் இடைவெளி இருக்கிறது. அதுவரை, தமிழக அணை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர் போதாது என்றே நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழையும் எந்த அளவுக்கு பெய்யும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழ்நாட்டில் இந்தாண்டு முறையாக மழைப்பொழிவு இருக்காது என்றே வானிலை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், கைவசம் உள்ள நீர் இருப்பை முறையாக சேமிக்காவிட்டால் தமிழகம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் அவலம் உண்டாகும்.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வறட்சி 2016 - 17ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. பல மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள அணைகள், பாசன ஏரிகளில் நீர்இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. அணைகள், பாசன ஏரிகளில் நீரிருப்பு குறைவதுடன் மேய்ச்சல் நிலங்கள் வறண்டு வருவதால் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை அபாயமும் நிலவுகிறது.
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட சில பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன், சில இடங்களில் 400 அடி ஆழத்திலும் தண்ணீர் கி டைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.