

பசிபிக் பெருங்கடலில் 'எல் நினோ' (El Nino) வழக்கத்திற்கு மாறாக மிகவும் தீவிரமடைந்து, பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை இதுவரை இல்லாத வகையில் உயரத்தை எட்டியுள்ளது. இது இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் வானிலை அமைப்புகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
மத்திய பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் (எல் நினோவைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனிக்கும் பகுதி) மேற்பரப்பு வெப்பநிலை வரலாற்றிலேயே முதல்முறையாக 30°C என்ற அபாயகரமான எல்லையைத் தொட்டுள்ளது என்று அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) தெரிவித்துள்ளது.
தீவிரமடைந்து வரும் 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) விளைவினால் அக்டோபர் 22-ம்தேதி இந்த மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இதுவரை உள்ள பதிவுகளில் காணப்படாத ஒரு புதிய உச்சமாகும். இந்தக் காலநிலை நிகழ்வு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், இதன் தாக்கம் அடுத்தாண்டு (2027) வரை நீடிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பகுதிகளில் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை சாதனை அளவை எட்டும் என்றும், எல் நினோ டிசம்பர் மாதத்தில் உச்சத்தை அடையக்கூடும் என்றும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) குறிப்பிட்டுள்ளது.
எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலில் இயல்பான காற்றோட்டம் மற்றும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும். மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் அடைகிறது. இந்த நிகழ்வு பொதுவாக ஒவ்வொரு 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும்.
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் சர்வதேச வானிலை அமைப்புகள் பசிபிக் பெருங்கடலின் நடுப்பகுதியில் உள்ள 'நினோ 3.4' (Niño 3.4) என்ற குறிப்பிட்ட பகுதியைத்தான் உலகளாவிய வானிலை மாற்றங்களைக் கணிக்க முக்கியமாகக் கண்காணிக்கின்றன.
இப்பகுதியில் சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு, ஜூன் மாதத்தில் இயல்பை விட 1.6°C அதிகமாக இருந்து, ஆகஸ்ட் மாதத்தில் 2.5°C ஆக உயர்ந்தது.
இது அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் இயல்பை விட சுமார் 3.7°C அதிகமாக இருக்கலாம் என்றும், நவம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரையிலான காலத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய சாதனையான 2.6°C-ஐ மிஞ்சக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த அளவுக்கு கொதிக்கிறது?
வழக்கமான எல் நினோ காலங்களில் பசிபிக் கடலின் வெப்பநிலை சராசரியை விட 1.5°C முதல் 2°C வரை மட்டுமே அதிகரிக்கும். ஆனால் தற்போதைய எல் நினோ நிகழ்வு, சராசரியை விட சுமார் 3.4°C முதல் 3.8°C வரை கூடுதல் வெப்பமடைந்து, கண்காணிப்பு வரைபடங்களின் எல்லைகளையே தாண்டியுள்ளது என WMO பொதுச்செயலாளர் செலஸ்டி சௌலோ கவலை தெரிவித்துள்ளார்.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுமே இந்த 'சூப்பர் எல் நினோ'வுக்கு முக்கியக் காரணங்களாகும்.
இதன் தாக்கம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்பதால், நீர் மேலாண்மை மற்றும் விவசாயத் துறைகளில் இந்தியா தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவுக்கு காத்திருக்கும் பாதிப்புகள் என்னென்ன?
எல் நினோ 7 மாதங்களில் இருந்து 24 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த எல் நினோவால்தான் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு குறைவாக பதிவானதாகவும், வரும் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்படுகிறது.
பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண வெப்ப மாற்றம், உலகளாவிய வானிலையை தலைகீழாக மாற்றுவதுடன் இந்தியாவுக்குப் பின்வரும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எல் நினோ பொதுவாக இந்தியப் பருவமழையைப் பலவீனப்படுத்தும். உருவாகி வரும் எல் நினோவானது மழைப்பொழிவு மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்த கவலைகளை ஏற்படுத்துகிறது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின்படி, 2026 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை ஏற்கனவே வழக்கத்தை விட 13% குறைவாகப் பதிவாகி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் கடல் 30°C வரை கொதிப்பதால், வரவிருக்கும் காலங்களிலும் மழைப்பொழிவு மேலும் குறைய வாய்ப்புள்ளது.
உலக வானிலை அமைப்பின் (WMO) அக்டோபர் மாதக் கணிப்பின்படி, வரும் மாதங்களில் தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடலின் இந்த அதீத வெப்பம் காரணமாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் குளிர்காலம் மற்றும் கோடைகாலங்களில் இயல்பை விட மிக அதிக வெப்பநிலை பதிவாகலாம். மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறங்களில் வெப்ப அலைகளின் (Heatwaves) தாக்கம் தீவிரமடையும்.
பருவமழை பொய்த்துப் போவதால் பயிர் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். இது உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும்.
எல் நினோ நிகழ்வு மட்டுமே இந்தியாவின் வானிலையைத் தீர்மானிப்பதில்லை. மற்ற காலநிலை மாற்ற முறைகளும் மற்றும் உள்ளூர் காரணிகளும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையைப் பாதிக்கின்றன. இருப்பினும், வழக்கத்திற்கு மாறாக வெப்பமான பசிபிக் கடல் நீர், வெப்பம் மற்றும் மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட சீர்குலைந்த வானிலையின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
கடல் மேற்பரப்பு வெப்பநிலை 28°C-க்கு மேல் உயர்ந்தாலே புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது 30°C-ஐ எட்டியுள்ளதால், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்து, மிகக் குறுகிய காலத்தில் அதிதீவிர புயல்களாக மாறும் (Rapid Intensification) ஆபத்து உள்ளது.
மறுபுறம், போதிய மழையின்மை காரணமாக அணை மற்றும் நீர் தேக்கங்களின் கொள்ளளவு குறைந்து, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்த நிகழ்வு வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரும் மாதங்களில் அதன் விளைவுகள் எவ்வாறு வெளிப்படக்கூடும் என்பதற்கான தடயங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் பசிபிக் பெருங்கடலைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.