
நவம்பர் 22, 2024 வெள்ளிக்கிழமை - விண்வெளி வரலாற்றில் மறக்க முடியாத நாள்!
அன்று தான் விண்வெளிக்குச் சென்ற நூறாவது பெண்மணி ஆனார் எமிலி கலாண்ட்ரெல்லி (Emily Calandrelli).
அமெரிக்காவில், வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள மார்கண்டவுன் நகரைச் சேர்ந்தவர் இவர். 38 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இவர் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பயின்ற எஞ்சினியர் ஆவார்.
ஷரான் ஹெக்லே, மார்க் ஹெக்லே, ஆஸ்டின் லிட்டரல், ஜேம்ஸ் ரஸ்ஸல், ஹென்றி உல்ஃபாண்ட் ஆகிய உல்லாசப்பயணிகளுடன் ஆறாவது நபராக ப்ளூ ஆரிஜின் என்ற கம்பெனி மூலமாக விண்வெளிக்குச் சென்றார் அவர்.
ப்ளூ ஆரிஜின் நிறுவனம் மேற்கொள்ளும் ஒன்பதாவது விண்வெளி உல்லாசப் பயணம் இது. பூமியின் வளிமண்டலத்தை விண்வெளியுடன் பிரிக்கும் எல்லையைத் தாண்டி விண்வெளியில் சிறிது நேரம் இருந்து பின்னர் பூமிக்கு அனைவரும் திரும்பினர்.
1963ம் ஆண்டு ஜூன் மாதம் வாலண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
பின்னர் இருபது ஆண்டுகள் எந்தப் பெண்மணியும் விண்வெளிக்குச் செல்லவில்லை.
1983ல் சாலி ரைட் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார்.
நூறாவது பெண்மணியாக விண்வெளிக்குச் சென்ற கலாண்ட்ரெல்லி, "ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட குறுகிய மனம் படைத்த ஆண்களால் இண்டர்நெட்டில் இந்த அபாரமான சம்பவம் சிறுமைப்படுத்தப்பட்டு விட்டது . இது பெண்கள் மீதுள்ள வெறுப்பு இன்னும் சமூகத்தில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது! இருபது ஆண்டுகளாக இதற்காக நான் பாடுபட்டு வருகிறேன். விண்வெளியில் பறக்க வேண்டும் என்று பல காலமாக நான் கனவு கண்டு வந்தேன். இது நடக்காதோ என்று பெரிதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்," என்கிறார்.
ஆனால் விண்வெளிக்குச் சென்ற பின்னர் இந்த மகிழ்ச்சி உணர்வுகளெல்லாம் பொங்க, “நான் சாதித்து விட்டேன். இதோ நான் விண்வெளியில் இருக்கிறேன். எனக்கு குழந்தைகள் பிறந்த போது ஏற்பட்ட அதே உணர்வை நான் பெற்றேன்," என்றார் அவர்.
ப்ளூ ஆரிஜின் என்ற கம்பெனி மூலமாக சோஷியல் மீடியாவிற்கு வெளியிடப்பட்ட பதிவு அனைவராலும் வரவேற்கப்பட்டது. ஆனால் நூறாவது பெண் விண்வெளியிலா என்ற ஆணாதிக்க மனம் கொண்ட எதிர்ப்பாளர்களின் விமரிசனங்கள் வரத் தொடங்கின. கிண்டல் செய்ததோடு ஏராளமான கடுமையான, எதிர்மறை விமரிசனங்களை அவர்கள் பதிவிட ஆரம்பித்தனர்.
அவரது குரல், நடை உடைபாவனை பற்றிப் பதிவான கேலியான விமரிசனங்கள் அவரை வெகுவாகப் பாதித்து விட்டன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கலாண்ட்ரெல்லி தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். "எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய நான் ஜன்னல் வழியே வெளியே பார்த்து அழுது கொண்டிருக்கிறேன்" என்கிறார்.
ஆனால் ஏராளமான பெண்மணிகள் இவரது பயணத்தை மகிழ்ச்சிகரமாக வரவேற்றதோடு இவரது ராக்கெட் விண்வெளிக்குப் புறப்படுவதைத் தங்கள் மகள்களுடன் பார்த்து ஆனந்தித்ததாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
விண்வெளி ஏகிய நூறாவது பெண்ணுக்கு ஜே!