

தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழை எளிய மக்கள், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசால் ‘இலவச வீட்டுமனை பட்டா’ (Free House Site Patta Scheme) வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவை அரசே இலவசமாக வழங்குகிறது.
மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 1 செண்டு நிலம் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
நீண்ட காலமாகப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு ‘இலவச வீட்டுமனை பட்டா’ வழங்கி வருகிறது. பட்டா கிடைத்த பிறகு பயனாளிகள், வங்கிகளில் வீடு கட்டக் கடன் உதவி பெற முடியும்.
தேவையான ஆவணங்கள்:
இந்த இலவச பட்டாவை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணம் கண்டிப்பாக தேவை.
ஆதார் அட்டை,
இருப்பிடச் சான்று,
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
வருமானச் சான்றிதழ்
சாதி சான்றிதழ்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
அந்த நிலத்தில் வசிப்பதற்கான ஆதாரம்(வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது/தண்ணீர் பில்).
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான தகுதி வரம்புகள் :
* தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இலவச பட்டா கிடைக்கும்.
* விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
* இலவச வீட்டு மனை பட்டாவை பெற வேண்டுமென்றால், உங்கள் பெயரில் எந்த வீட்டுமனையும் இருக்கக் கூடாது.
* உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக் கூடாது.
* ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவேளை ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் அவர்களிடம் இருந்து நிலத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும். (முதலில் ரூ.3 லட்சம் இருந்தது. தற்போது உயர்த்தப்பட்டுள்ளது)
* புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது வசித்திருக்க வேண்டும். அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும்.
நிபந்தனை :
தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் மனை மற்றும் பட்டா வாங்கியவர்கள் அந்த நிலத்தை யாருக்கும் விற்க முடியாது. ஆனால் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திக் கொள்ள மட்டுமே முடியும். அதேசமயம், குறிப்பிட்ட வருடங்கள் கழித்து விற்றுக்கொள்ளலாம் என்று காலவரம்பு நிர்ணயித்திருந்தால், அதன் பிறகு விற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பித்தாலும் எந்த இடத்திற்கெல்லாம் பட்டா கிடையாது?
அரசால் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட இடங்களில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை வசிப்பவர்களுக்கும், அத்தனை ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். அரசு புறம்போக்கு நிலங்களில் பல வருடங்கள் வசித்து வருபவராக இருந்தாலும், கீழ்க்கண்ட வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் பட்டா வழங்காது. அது எந்த வகை நிலங்கள் என்று அறிந்து கொள்ளலாம்:
* நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு அதாவது, ஏரி, குளம், குட்டை, கால்வாய் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற நிலங்களுக்குப் பட்டா கிடைக்காது.
* காடுகள், மேட்டு நிலங்கள், மயானம் மற்றும் மலைப் பகுதிகளில் அதாவது வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படாது.
* மத்திய அரசுக்கு சொந்தமான ரெயில்வே நிலங்கள், ராணுவத்திற்குச் சொந்தமான இடங்கள் உள்ளிட்ட நிலங்களுக்கு மாநில அரசு பட்டா வழங்க முடியாது.
* இந்த திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும். வணிக ரீதியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் பட்டா வழங்கப்படாது.
* கோவில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அதாவது, கோவில்கள், தேவாலயங்கள் அல்லது மசூதிகளின் பெயரில் உள்ள பட்டா நிலங்களுக்கு பட்டா கிடையாது.
தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம் பயனாளிகள், வட்டாட்சியர் அலுவலகம், இசேவை மையம் அல்லது ‘இணையதளம்’ வழியாக விண்ணப்பித்து இலவச பட்டாவை பெற முடியும்.
நீங்கள் இலவச பட்டாவிற்கு விண்ணப்பித்த பிறகு உங்கள் மனுவின் நிலை என்ன என்பது குறித்து உங்கள் மொபைல்போன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
முதலில் tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் பட்டா பிரிவில் உள்ள'Check Status' அல்லது 'Application Status' என்பதை கிளிக் செய்து உங்களுடைய விண்ணப்ப எண்ணை பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டைச் சரியாகப் பதிவிட்டு 'Submit' கொடுத்தால், உங்கள் மனு எந்த அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியும்.