தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..! அண்ணாமலைக்கு வலைவீசும் அதிமுக நிர்வாகிகள்..! பின்னணி என்ன?

முன்னாள் அமைச்சர்கள் வெளியேற்றத்தால் தவிக்கும் அதிமுகவை மீட்க, அண்ணாமலையை கட்சியில் இணைக்க மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
annamalai EPS
annamalai EPS
Updated on

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாத ஒன்று. ஆனால், சமீபகாலமாக தமிழக அரசியல் களத்தில் அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்கள் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சுமார் 60 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுகவுக்கு பதிலாக தவெக என்னும் புதிய கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் தான் இந்த புதுப்புது அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

தேர்தலுக்கு முன்பு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல முக்கிய கட்சிகள், தற்போது ஒன்றன்பின் ஒன்றாக கூட்டணியில் இருந்து விலகி புதிய அரசியல் பாதையை தேர்வு செய்து வருகின்றன.

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மதிமுக கட்சிகள் தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளன.

மறுபுறம் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. மொத்தம் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு மற்றும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அவமானம் காரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தீவிர உட்கட்சி பூசல் ஏற்பட்டு பிளவு கண்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எழுந்த அதிருப்தியால், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதன் உச்சமாக, சட்டமன்றத்தில் ஆளும் தவெக (TVK) அரசு கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவை மீறி பல எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தொடர்ச்சியான இந்த உள்மோதல்களால் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெக கட்சியில் இணைந்தனர். நேற்று முன்தினம் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். அதுமட்டுமின்றி இன்னும் பல நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிமுகவை சேர்ந்த ஆறு முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே ஒரு தொகுதி (திருச்சி கிழக்கு) காலியாக இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே நேற்று அதிமுக இலக்கிய அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பின்னடையை ஏற்படுத்தி உள்ளது.

நிலைமையைச் சமாளிக்க எடப்பாடி பழனிசாமி புதிய பதவிகளை அறிவித்த போதிலும், அதிருப்தியாளர்கள் அவற்றை நிராகரித்து கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனால் கட்சிக்கு அடிமட்ட அளவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன் அதிமுக கட்சி மெல்ல மெல்ல கரைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பமாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போது ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலையை அதிமுகவிற்குள் வரவழைக்க அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிமுகவில் மெகா ட்விஸ்ட்: டார்கெட் விஜயபாஸ்கர்.. ஆனால் விக்கெட்டானது பெஞ்சமின்!
annamalai EPS

இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் ரகசியமாக ஆலோசனை நடத்தியதாகவும், இந்த ஆலோசனையில் அண்ணாமலைக்கு தமிழகத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.

இளைஞர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு இருக்கும் இந்த அசாத்திய செல்வாக்கை அதிமுகவிற்கு சாதகமாகப் பயன்படுத்த சில மாவட்டச் செயலாளர்கள் விரும்புகின்றனர். எனவே அவரை அதிமுகவிற்கு கொண்டு வந்தால் கட்சி உயிர்ப்புடன் இருக்கும் என்று அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Annamalai
Annamalai

பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கடந்தாண்டு அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் பாஜகவிற்காக பிரசாரங்கள் மட்டும் செய்தார். தேர்தல் முடிவடைந்த பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் We The Leaders எனும் இயக்கத்தை தொடங்கி இதில் உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, வாரிசு அரசியலுக்கு எதிரான அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும் வரும் 12-ம்தேதி பொள்ளாட்சியில் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாட்டை நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஜூலை முதல் கதையே மாறப் போகுது.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் வீடியோ.!
annamalai EPS

இதற்கிடையே அண்ணாமலையை அதிமுகவில் சேரும்படி அழைப்பு விடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் சில மாவட்டச் செயலாளர்களின் தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலையோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அல்லது மறுப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருக்கும் இடையே தொடர்ச்சியான அரசியல் கருத்து வேறுபாடுகளும் மற்றும் வார்த்தை மோதல்களும் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததும், அண்ணாமலையை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தின.

அண்ணாமலையின் செயல்பாடுகளால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, 2023-ஆம் ஆண்டு பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டது. அதன்பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணியை ஏற்படுத்த வேண்டுமென்றால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றினால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கண்டிப்புடன் தெரிவித்தது. இதன் விளைவாகவே, தேசிய பாஜக தலைமை அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றியது.

இதையும் படியுங்கள்:
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை..! ராஜினாமா ஏற்பு..!
annamalai EPS

இந்நிலையில் அண்ணாமலையை அதிமுகவில் கொண்டுவர நிர்வாகிகள் போடும் கணக்கிற்கு இரு எதிரெதிர் துருவங்களான எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒப்புக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com