தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு பொதுக்கூட்டத்தை தவிர்த்து வந்த விஜய் கிட்டத்தட்ட 73 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தினார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே நாளை (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த ஈரோடு மாவட்ட போலீஸ்துறை அனுமதி அளித்தை தொடர்ந்து மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பொது கூட்டத்திற்கு காவல்துறை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும் கூட்டம் நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து கட்சித்தலைவர் விஜய் பேசுவதை அருகில் இருந்து காணும் வகையில் மைதானத்தில் பெண்களுக்கான தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
த.வெ.க. வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்...
* கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.
* த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும், அவரது வாகனத்தை பின்தொடர்வது போன்ற போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
* காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும்.
* பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.
* வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
* உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
* பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
* மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்களின் மீது ஏறக் கூடாது. மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது.
* தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும்.
தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் கூறப்பட்டுள்ளது.