

வாடைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் வாடகை வீட்டில் ஐந்து வருடங்கள் வசித்தாலும் சரி, ஐம்பது வருடங்கள் வசித்தாலும் சரி, அதை ஒருபோதும் சொந்த வீடாக உரிமைகோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது பல காலமாக வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போருக்கும் இருந்துவந்த குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது..
இந்தியாவில் முன்பு வாடகைக்கு இருப்பவர்கள் பல ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து வீட்டின் உரிமையாளரிடம் சொந்தம் போல் பழகி, கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்று சொந்தக்காரர்கள் போல் பழகுவார்கள்.
ஆனால் தற்போது வாடகைக்கு இருப்பவர்கள் கால் பட்டால் குத்தம், கை பட்டால் குத்தம் என்பது போல் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் வீட்டு உரிமையாளரிடம் சண்டை போடுபவர்களும் இருக்கிறார்க, சண்டை போட்டு கொண்டு பல வீடுகள் மாறுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் வாடகைக்கு இருந்து கொண்டு வீட்டின் உரிமையாளரையே மிரட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சிலர் அதிக வருடங்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தால் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சில வீட்டு உரிமையாளர்களுக்கு அதிக நாட்கள் ஒருவர் வாடகைக்கு குடியிருந்தால் அவர்களை வெளியேற்ற முடியாது, பிரச்சனை செய்வார்கள் என்ற அச்சமும் இருக்கிறது.
இந்நிலையில் வாடகை தாரருக்கும், வீட்டின் சொந்தக்காரருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தரமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஒரு வீட்டின் உரிமையாளர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது வீட்டில் வசித்து வரும் வாடகைதாரர் வீட்டை சொந்தம் கொண்டாடுவதாகவும், அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார்.
வீட்டின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வாடகைதாரர், தான் அந்த வீட்டில் 1980 முதல் வசித்து வருவதாகவும், நான் வாடகை கொடுக்காதபோதும் வீட்டு உரிமையாளர் வீட்டை காலிசெய்ய சொல்லவில்லை, adverse possession விதியின் கீழ் அந்த வீடு தனக்கே சொந்தம் என வாதத்தை முன்வைத்தார்.
லிமிட்டேஷன் சட்டம், 1963இன் கீழ், ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து மற்றும் வெளிப்படையாக உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு இடத்தில் வசித்து அல்லது ஆக்கிரமித்திருந்தால், அந்த நபரே அந்தச் சொத்தின் உரிமையைக் கோர முடியும் என்று சட்டம் உள்ளதால் அந்த சட்டத்தை மேற்கோள் காட்டி வாடகைதாரர் வீடு தனக்கே சொந்தம் என்ற வாதத்தை முன்வைத்தார்.
இருப்பினும், வாடகைதாரரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த வீட்டு உரிமையாளர், தொடக்கம் முதலே வாடகைதாரர் வீட்டுக்கு வாடகை கொடுத்து தனது அனுமதி உடனேயே அந்த வீட்டில் வசித்து வந்ததால் இந்த இடத்தில் adverse possession சட்டத்தின் கீழ் உரிமையாளராக மாற முடியாது என்று வாதிட்டார்.
இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றதுடன் ஒவ்வொரு நீதிமன்றமும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கி சொந்த வீடு வைத்திருப்பவர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.
அதாவது வாடகை என்பது சட்ட உறவு என்றும் உரிமையாளரின் சம்மதத்துடனேயே ஒருவர் வசிப்பதால், இது adverse possession கீழ் வராது என்றும் நீண்ட காலம் ஒரு வீட்டில் ஒருவர் வாடைக்கு குடியிருக்கிறார் என்பதாலேயே, அவர் அந்த வீட்டின் உரிமையாளராக மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த வகையில் வாடகை வீடு தொடர்பான விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான உரிமை கோரல் வழக்குகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாடகை வீடு என்பது சட்டத்தின் பார்வையில் என்றென்றும் வாடகை வீடு மட்டுமே. எத்தகைய சூழலிலும் வாடகை வீடு சொந்தமாக சட்டப்படி மாறாது, அதனை சொந்தம் போல கொண்டாட முடியாது என்பதே சட்டத்தின் நிலைப்பாடாகும்.
வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.