

மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் இந்திய குடும்பங்களில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ, அதன் மீதான விருப்பமோ கொஞ்சமும் குறையவில்லை என்பதை பல தங்கம் சார்ந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்தவகையில் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதனை மக்கள் வாங்கத்தான் செய்வார்கள். தங்கத்துக்கு மாற்று ஏதாவது ஒரு பொருள் வரும் வரை, அதுதான் ‘கிங்'.
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆகிறது.
வரலாறு காணாத வகையில் ரூ.1 லட்சத்தை தாண்டினாலும் இன்றும் இல்லத்தரசிகளுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் கொஞ்சமும் குறையவில்லை. பிரபல நகைக்கடைகளிலும் வழக்கமாக விதவிதமான டிசைன்களில் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்றுகூட குறையவில்லை.
மாறாக தங்கம் விலை வருங்காலத்தில் ரூ.1¼ லட்சம், ரூ.1½ லட்சத்தை நெருங்கி விடுமோ என்ற பயத்தில் இன்னும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தங்கத்தில்தான் பலர் முதலீடு செய்து வருகின்றனர்.
ஏனென்றால் அது எப்போதும் ஒரு பணம் கொடுக்கும் மரமாகவே இருப்பதால், அதற்கு மவுசு குறையாது. நடுத்தர மக்கள்தான் விலையை பார்த்து யோசித்து வாங்குவார்கள். ஆனாலும் தங்கத்தை வாங்குகிறவர்கள் வாங்கிக்கொண்டேதான் இருப்பார்கள்.
அதேபோல் தற்போது தங்கத்தின் விலை தினமும் அதிகரித்து கொண்டே வருவதால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பணம் கொடுத்த தங்கம் வாங்க முடியாவிட்டாலும் தங்களிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை மாற்றி தங்களுக்கு பிடித்தமான புதிய நகைகளை வாங்கி தங்கள் ஆசைகளை தீர்த்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பழைய தங்க நகைகளை மாற்றி புதிய தங்க நகைகளை வாங்கும் போது மக்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னென்ன என்பதை விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
நீங்கள் மாற்ற நினைக்கும் பழைய தங்க நகையின் எடை, அதன் தூய்மை, எந்த ஊரில் வாங்கப்பட்டது, அதாவது சென்னையா, வெளிமாநிலமா, அந்த நகையில் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா இல்லையா என்பது போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பின்னர் தான் விற்பனையாளர்கள் உங்கள் தங்க நகைக்கான மதிப்பீட்டை கணிப்பார்கள். உங்கள் நகையில் ஹால்மார்க் குறியீடு இல்லாத பட்சத்தில் உங்கள் நகைக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கும்.
அதாவது ஹால்மார்க் குறியீடு சில வருடங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் நீங்கள் வாங்கிய தங்க நகை 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாக இருந்தால் தூய தங்கமாக இருந்தாலும் அதில் ஹால்மார்க் குறியீடு இருக்காது என்பதால் அந்த நகையை இன்றைய தங்க விலைக்கு விற்பனையாளர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே பழைய நகையில் ஹால்மார்க் குறியீடு இருக்கும்பட்சத்தில் கணிசமான தொகை கிடைக்கும் இல்லை என்றால் அன்றைய விலையை விட சற்று குறைவாகவே எடுத்து கொள்ல வாய்ப்புள்ளது.
சில பிரபலமான நகைக்கடைகள் தங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நகை வாங்க வேண்டும் என்பதற்காக சில யுத்திகளை கையாள்வார்கள். அதாவது அவர்கள் கடையில் வாங்கிய தங்க நகைகளை கொடுத்து புதிய நகை வாங்கும் போது பெரியளவில் கழிக்காமல் அதிகபட்ச தொகையை கொடுப்பார்கள். இதே வேறு கடையில் வாங்கிய நகைக்கு குறைத்த அளவு தொகையே கிடைக்கும்.
எனவே முடிந்தவரை நீங்கள் பழைய நகையை மாற்றி புதிய நகையை எடுக்க நினைத்தால் பழைய நகை வாங்கிய நகைக்கடையிலேயே மாற்றுவது உங்களுக்கு லாபமாக இருக்கும். முக்கியமாக அந்த கடையில் தற்போது ஹால்மார்க் நகைகள் இருந்தால் மட்டும் வாங்குங்கள் இல்லை என்றால் வேறு கடைக்கு செல்லுங்கள் என்கிறார்.
நீங்கள் வாங்க கூடிய புதிய நகையில் ஹால்மார்க் குறியீடு மற்றும் நீங்கள் நகை வாங்கும் கடை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்று பெறப்பட்ட கடை என்றால் மட்டுமே அங்கு நீங்கள் நகை வாங்குவது நல்லது.
அதேபோல் உங்களது பழைய தங்க நகையை விலைக்கு கொடுக்கும் போது அதில் எவ்வளவு கிராமை கழிக்கிறார்கள் என்பதை கவனித்து, அதனால் உங்களுக்கு லாபமா அல்லது நஷ்டமாக என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் தூய்மையான தங்கத்தை வாங்க, 'ஹால்மார்க்' அடையாளம் மூலம் அதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். கடந்தாண்டு தங்க ஹால்மார்க் விதிகள் மாறி வருவதால், அனைத்து தங்க நகைகளும் இப்போது 6 இலக்க எண்ணெழுத்து HUID அல்லது ஹால்மார்க் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கும்.
ஒரு கிராமுக்கு தங்கத்தின் உண்மையான விலையைத் தவிர, நகைக்கடைக்காரர்கள் அதில் தயாரிப்பு கட்டணங்களையும் சேர்க்கிறார்கள். இருப்பினும், நீங்கள் செலுத்தும் ஒரு கிராமுக்கு தொகையைக் கணக்கிட்டு உங்கள் நகைகளுக்கு விதிக்கப்படும் வேறு ஏதேனும் கட்டணங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஹால்மார்க் குறியீடு இல்லாத தங்க நகைகளை ஒருபோதும் வாங்கக்கூடாது. ஏனெனில் அது போலியாக கூட இருக்கலாம் என்கிறார்.
அதேபோல் நீங்கள் உங்கள் பழைய தங்க நகையை பெங்களூருவில உள்ள ஒரு சிறிய நகைக்கடையில் வாங்கி இருக்கும்பட்சத்தில் அதனை சென்னையில் உள்ள நகைக்கடையில் மாற்றி புதிய தங்க நகை எடுக்க நினைத்தால் அதற்கு மிகவும் குறைந்த அளவிலான தொகை தான் கிடைக்கும். ஏனெனில் தங்கத்திற்கு மாநிலத்திற்கு மாநிலம் தரம் மற்றும் விற்பனை முறையில் மாறுபாடுகள் உள்ளது. அதேசமயம், நீங்கள் பெங்களூருவில் வாங்கிய தங்க நகை கடையின் கிளை சென்னையில் இருக்கும் பட்சத்தில் அங்கு உங்கள் நகையை மாற்றினால் இன்றைய விலைக்கு எடுத்துக்கொள்வார்கள்.
சில கடைகளில் பழைய தங்க நகைகளை மாற்றி புதிய நகையை வாங்கும் ரசீது (பில்) இல்லாமல் வாங்கினால் இத்தனை சதவீதம் குறைக்கிறோம் என்று சொல்வார்கள். அப்படி சொன்னால் கண்டிப்பாக வாங்காதீங்க. ஏனெனில் பிற்காலத்தில் நீங்கள் வாங்கிய அந்த நகை போலி என நீங்கள் கண்டறிந்தாலோ அல்லது வாங்கியதை விட குறைவான எடையில் இருப்பதை கண்டுபிடித்தாலோ ரசீது இல்லை என்றால் அவர்களிடம் சென்று கேட்க கூடாது முடியாது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் சில நகைக்கடைகளில் பழைய நகைகளை உருக்கிய பிறகு தான் அதற்கு மதிப்பீடு செய்து அதற்காக தொகையை கணக்கீடுவார்கள்.
அப்படி அந்த உங்களுடைய பழைய நகையை அந்த கடை ஊழியர் உருக்கும் போது கவனமாக பார்க்க வேண்டும். ஏனெனில் உருக்கும் தங்கத்தின் சில துளிகள் கீழே விழுந்தாலும் உங்களுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நகையை உருக்கும் போது அருகில் உள்ளவர்களுடன் பேசிக்கொண்டிருக்காமல் நகை உருக்குவதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தால் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அதேசமயம் என்னதான் நாம் பழைய தங்க நகையை மாற்றி புதிய நகை வாங்கினாலும் சேதாரம், செய்கூலி, ஜிஎஸ்டி என்று போட்டு நம்முடைய பழைய நகையை விட குறைந்த எடையிலேயே புதிய நகையை வாங்க முடிகிறது. அதாவது, இன்று உங்கள் பழைய ஹால்மார்க் முத்திரையிட்ட 1 சவரம் தங்க நகையை மாற்றி புதிய தங்க நகை வாங்க நினைத்துள்ளீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். நேற்று 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,800 எனில் இதற்கு சேதாரம், செய்கூலி, ஜிஎஸ்டி போட்டு கடைசியில் ரூ.1,22,000க்கு வந்து விடும். நீங்கள் அதிகமாக 6, 7 ஆயிரம் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே பழைய நகையை மாற்றி புதிய நகையை வாங்கும் போது அதில் ஹால்மார்க் இருக்கிறதா, நகையின் எடை சரியாக உள்ளதா, செய்கூலி , ஜிஎஸ்டி ஆகிய அனைத்தும் பில்லில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும்.