

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 8-ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் மக்கள் அனைவரும் அதற்கான ஏற்பாடுகளை இப்பொழுதே மகிழ்ச்சியுடன் தொடங்கி விட்டனர். புத்தாடை வாங்குவது, பலகாரங்கள் செய்வது, பட்டாசுகள் வாங்குவது என நாடே பண்டிகை கோலாகலத்திற்கு தயாராகி வரும்.
தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது மத்தாப்புகளும் பட்டாசுகளும் தான். புத்தாடை, பலகாரங்கள் என எத்தனை இருந்தாலும், பட்டாசு சத்தம் கேட்டால்தான் அந்தப் பண்டிகைக்கே ஒரு தனி உற்சாகமும் முழுமையும் கிடைக்கிறது. பட்டாசு வெடிக்காமல் தீபாவளி முழுமைப்பெறாது.
இதற்கிடைய இந்தாண்டு உற்பத்தி குறைவு காரணமாகப் பட்டாசு ஆலைகளில் அடக்க விலை 15 சதவீதம் வரை உயர்ந்திருப்பது பட்டாசு பிரியர்களை சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது. பட்டாசு ஆலைகளில் அடக்க விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், சில்லறை விற்பனையிலும் பட்டாசு விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடக் காத்திருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நம் நாட்டில் தீபாவளி என்றாலே, நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் என்றால், அந்தப் பட்டாசுகளின் தலைநகரமாக விளங்குவது தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி நகரம் தான்.
சிவகாசி பகுதியில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை, இணைப்பு வெடிகள் உற்பத்தி செய்யத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு 60 சதவீத வகை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கந்தகம் (Sulphur), நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக சிவகாசியில் இருந்து மற்ற ஊர்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளது. பட்டாசு தொழிலாளர்களின் கூலி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமின்றி கடந்த மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடைபெறாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பட்டாசுகளின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதற்கிடையில், கட்டுப்பாடுகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் ஆலைகளில் பட்டாசுக்கான அடக்க விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால், இந்தாண்டு தீபாவளிக்கு சில்லறை கடைகளில் பட்டாசு விலை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை (சில இடங்களில் 30% வரை) உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விலை உயர்ந்த போதும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் மக்கள் விரும்பும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலை உயர்வைத் தவிர்க்க நினைக்கும் மக்களைக் குறிவைத்து, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை அசாத்திய தள்ளுபடிகள் (Heavy Discounts) தருவதாகக் கூறிப் போலி பட்டாசு இணையதளங்கள் மூலம் சைபர் குற்றவாளிகள் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்துத் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரும் (TN Cyber Crime Wing) மாவட்ட காவல்துறையினரும் பொதுமக்களுக்குத் தொடர் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
பட்டாசு மோசடி நடக்கும் விதம்:
* இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மிகக் குறைந்த விலையில் புகழ்பெற்ற பிராண்டுகளின் பட்டாசுகள் கிடைப்பது போல போலி வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களை இடுகிறார்கள்.
* அந்த விளம்பரங்களை க்ளிக் செய்யும்போது, அவர்கள் பயனர்களை வாட்ஸ்அப் (WhatsApp) தளத்திற்கு அழைத்துச் சென்று, போலியான விலைப்பட்டியலைக் (Catalogue) காட்டி நம்ப வைக்கிறார்கள்.
* ஆர்டரை உறுதி செய்ய UPI அல்லது QR கோடு மூலம் முழுத் தொகையையும் முன்கூட்டியே செலுத்தக் கூறுகிறார்கள்.
* பட்டாசு பெட்டிகளின் மீது உண்மையான விலையை விட 4 முதல் 5 மடங்கு அதிகமான விலையை (MRP) அச்சிட்டு, பின்னர் அதில் பெரிய அளவில் தள்ளுபடி தருவது போல் ஏமாற்றுவார்கள்.
* கடந்த ஆண்டு விற்காமல் தேங்கிப்போன, நமத்துப் போன பட்டாசுகளை அதிக ஆஃபர் என்ற பெயரில் விற்கக்கூடும். இவை சரியாக வெடிக்காது.
* பட்டாசு பார்சலில் வரும் போது பெட்டி பெரியதாக இருக்கும், ஆனால் உள்ளே இருக்கும் பட்டாசுகளின் அளவு அல்லது எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும்.
* பணத்தைப் பெற்ற பிறகு, "அதிக டிமாண்ட் இருப்பதால் டெலிவரி தாமதமாகிறது" என்று கூறுவார்கள் அல்லது கூடுதல் பார்சல் கட்டணம் கேட்டுவிட்டு, இறுதியாக வாடிக்கையாளரை பிளாக் (Block) செய்துவிட்டு மறைந்துவிடுவார்கள். சிலருக்குத் தரம் குறைந்த பட்டாசுகள் மட்டுமே வந்து சேருகின்றன.
இந்த மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
* ஆன்லைனில் பட்டாசு வாங்கும் போது முன்பணம் செலுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் போலி இணையதளங்கள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்புள்ளது.
* "Limited Time Deal", "90% OFF" போன்ற விளம்பரங்களை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பாருங்கள்.
* அறிமுகமில்லாத அல்லது புதிய ஆன்லைன் முகவரிகளில் பட்டாசு வாங்குவதற்கு முன் முழுப் பணத்தையும் ஆன்லைனில் செலுத்த வேண்டாம்.
* பட்டாசு விற்கும் நிறுவனத்தின் GST எண் (GSTIN), கூகுள் மேப்ஸில் அவர்களின் உண்மையான கடை முகவரி (Shop Location) மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியானவைதானா என்பதை ஆர்டர் செய்வதற்கு முன் உறுதிப்படுத்துங்கள்.
* தள்ளுபடி சதவீதத்தை பார்க்காமல், இறுதி விலை (Net Price) நியாயமானதாக உள்ளதா என்று ஒப்பிட்டுப் பார்த்து வாங்குங்கள்.
* பட்டாசு பெட்டியின் பின்னால் உள்ள தயாரிப்பு தேதி (Manufacturing Date) இந்த ஆண்டினுடையதா (2026) என்று சரிபார்க்கவும்.
* முடிந்தவரை உங்களுக்கு அருகிலுள்ள உரிமம் பெற்ற மற்றும் நம்பகமான பட்டாசுக் கடைகளில் நேரடியாகச் சென்று வாங்குவதே பாதுகாப்பானது.
பட்டாசு விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து வாங்கவும். நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே பணப் பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள், ஸ்கிரீன்ஷாட்டுகளுடன் தேசிய சைபர் கிரைம் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணிலோ (24 மணி நேரமும் செயல்படும் அவசர எண்) அல்லது National Cyber Crime Reporting Portal என்ற தளத்தில் ஆன்லைனிலும் புகார் பதிவு செய்யலாம்.