

அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் லாப வரம்புகளைக் குறைப்பதால், முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் வரும் அக்டோபர் 1 முதல் 8% வரை விலை உயர்வை திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த பண்டிகைக் காலத்தில் ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் எல்இடி டிவிகளின் விலை உயர்வை நுகர்வோர் எதிர்கொள்ள நேரிடலாம்.
அதன்படி வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு (நவராத்திரி, தீபாவளி) முன்னதாக, அக்டோபர் 1 முதல் ஏசி, எல்இடி டிவி, வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 5% முதல் 8% வரை உயரவுள்ளது.
நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மேலும், மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக நடப்பு ஆண்டில் (2026) இந்தத் துறை மேற்கொள்ளும் மூன்றாவது விலை உயர்வு இதுவாகும்.
செம்பு (Copper), அலுமினியம், ஸ்டீல் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. தயாரிப்பிற்கு முக்கியத் தேவையான தாமிரம் (Copper), அலுமினியம், எஃகு (Steel) மற்றும் கச்சா எண்ணெய் வழிப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் சரக்குக் கப்பல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் (Freight Costs) கணிசமாக உயர்ந்ததுடன், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மேலும் விலை திருத்தங்களை அவசியமாக்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
எந்தெந்தப் பொருட்களுக்கு எவ்வளவு விலை உயர்வு?
பொருட்களின் வகையைப் பொறுத்து நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கின்றன:
ஏசி (Air Conditioners) & டீப் பிரீசர்கள் இவற்றின் விலை அதிகபட்சமாக 5% முதல் 8% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களின் விலை 3% முதல் 4% வரை உயரக்கூடும், சில பிராண்டுகளில் டிவிகள் 10% முதல் 20% வரை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ப்ளூ ஸ்டார் (Blue Star), கோத்ரேஜ் அப்ளையன்சஸ் (Godrej Appliances), ஹையர் (Haier), டைக்கின் (Daikin) மற்றும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் (Super Plastronics) உள்ளிட்ட நிறுவனங்கள்அனைத்துப் பிரிவுகளிலும் 4% முதல் 10% வரையிலான விலை உயர்வை உறுதிப்படுத்தியுள்ளன.
ஹிட்டாச்சி ஏர் கண்டிஷனர் (Hitachi air-conditioner) பிராண்டின் உரிமையாளரான எல்ஜி (LG) மற்றும் பாஷ் ஹோம் கம்ஃபர்ட் (Bosch Home Comfort) ஆகிய நிறுவனங்களும் ஏசி விலைகளை சுமார் 5% உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கின்றன.
கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகப் பிரிவின் தலைவரும் நிர்வாகத் துணைத் தலைவருமான கமல் நந்தி கூறுகையில், கடந்த விலை மாற்றத்திற்குப் பிறகு மூலப்பொருட்களின் விலை 8 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், தொழில் துறை முழுவதும் மீண்டும் ஒரு விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று தெரிவித்தார். ‘பல்வேறு தயாரிப்பு வகைகளில் 5 முதல் 7 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும்.
ஒவ்வொரு நிறுவனமும் இதை அமல்படுத்தும் நேரம் வேண்டுமானால் மாறுபடலாம். சில நிறுவனங்கள் அக்டோபரிலும், மற்றவை நவம்பரிலும் இதைச் செயல்படுத்தலாம். ஆனால் விலை உயர்வு என்பது நடந்தே தீரும்’ என்று அவர் கூறினார்.
இருப்பினும், விலை உயர்வுக்கு முன்பே டீலர்களும் விநியோகஸ்தர்களும் பொருட்களை இருப்பு வைத்திருந்ததால், பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் தொடர்ந்து பழைய விலையிலேயே வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க முடியும் என்று கூறினார். ஆனால் தீபாவளிக்குப் பிறகு, புதிய விலைகள் நிச்சயமாக அமலுக்கு வரும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 1 முதல் அறை ஏர் கண்டிஷனர்களின் (room air conditioners) விலையை சுமார் 5% உயர்த்த ஹையர் (Haier) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால், தீபாவளிக்குப் பிறகும், மீண்டும் ஜனவரி மாதத்திலும் விலையை மேலும் உயர்த்தலாம்.
எல்இடி (LED) டிவிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பிற தயாரிப்புகளின் விலையிலும் 2-3% உயர்வு இருக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 15% உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அக்டோபரில் 5%, டிசம்பரில் மேலும் 5% மற்றும் ஜனவரியில் மீண்டும் 5% உயர்வு இருக்கலாம். பொதுவாக ஒரு ஏர் கண்டிஷனருக்கு சுமார் 3-4 கிலோ செம்பு தேவைப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு மெட்ரிக் டன்னுக்கு சுமார் 8,000-9,000 டாலராக இருந்த செம்பின் விலை, தற்போது 14,500 டாலரை எட்டியுள்ளது என்றும், இது மேலும் உயரக்கூடும் என்றும் ஹையர் இந்தியா (Haier India) நிறுவனத்தின் தலைவர் என்.எஸ். சதீஷ் கூறினார்.
இந்தியாவில் தாம்சன், கோடாக் மற்றும் ப்ளாபங்க்ட் உள்ளிட்ட தொலைக்காட்சி பிராண்டுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், அக்டோபருக்குப் பிறகு தொலைக்காட்சி விலைகளை சுமார் 7% அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே 4-5% உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பானாசோனிக் லைஃப் சொல்யூஷன்ஸ் இந்தியாவின் (Panasonic Life Solutions India) தயாரிப்பு சந்தைப்படுத்தல் மற்றும் திட்டமிடல் (ஏசி பிரிவு) தலைவர் அபிஷேக் வர்மா கூறுகையில், ‘சிறிய திரை அளவுகளுக்கான டிவி விலைகள் 20 சதவீதம் வரை உயரக்கூடும், அதே நேரத்தில் பெரிய திரை அளவுகளுக்கான விலைகள், திரையின் அளவைப் பொறுத்து 10 சதவீதம் வரை அதிகரிக்கலாம்’ என்று கூறினார்.
இருப்பினும், பல டீலர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் ஏற்கனவே பழைய விலையில்உள்ள பொருட்கள் கையிருப்பில் (Stock) உள்ளதால், தீபாவளி பண்டிகை காலம் வரை நுகர்வோருக்கு சில பொருட்கள் ஓரளவிற்குப் பழைய விலையிலேயே சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் திட்டம் இருந்தால், வரும் அக்டோபர் 1-தேதிக்கு முன் வாங்குவது பணத்தைச் சேமிக்க உதவும்.