இந்திய ரயில்வேயின் பெருமை மிகுந்த ரயில்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ரயில்களில் மக்கள் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கிறார்கள். இதன் மூலமாக ரயிவேக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த வகையில், மேற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் மும்பை - அகமதாபாத் வந்தே பாரத் ரயில் மும்பையிலிருந்து அகமதாபாதுக்கு ஒரு தடவை சென்றால், பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலமாக ரயில்வேக்கு இருபது லட்ச ரூபாய் கிடைக்கிறது. ஆனால், அண்மையில் மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தின் ஐந்தாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை -அகமதாபாத் வந்தே பாரத் ரயில் அன்றைய தினம் பயணிகளை ஏற்றிச் செல்லாமலேயே 23 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியது. எப்படி தெரியுமா?
மும்பை - அகமதாபாத் வந்தே பாரத் ரயில் புதன் கிழமைகளில் ஓடாது. மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் அன்று ஒரு விளம்பரப் படத்தின் படப்பிடிப்பினை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தப் படப்பிடிப்புக்குக் கட்டணமாக மேற்கு ரயில்வே 23 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலமாக இந்திய ரயில்வே வரலாற்றில் வந்தே பாரத் ரயிலில் படப்பிடிப்பு நடத்திய முதல் இயக்குநர் என்ற பெருமை சூஜித் சிர்கர் என்ற இயக்குநருக்குக் கிடைத்துள்ளது. இவர் இயக்கிய இந்திப் படங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கூறுகையில், “பாலிவுட் இயக்குநர்கள் பலர் ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று மேற்கு ரயில்வே, நிர்வாகத்திடம் கேட்டு வருகிறார்கள். இதற்கென்று தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன்படி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்து வருகிறோம். மும்பை - அகமதாபாத் வந்தே பாரத் ரயில் ஓடாத நாளில், விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு முன்பாக போபால் விஷ வாயு விபத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரயில்வே மென், கேஸ்லைட், ஹீரோ பன்டி, ஓ மை காட் 2, பேபி டால் உட்பட பல படங்களின் படப்பிடிப்புகள் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும், ரயில் பாதைகளிலும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் மட்டும் விளம்பரப் படங்கள், திரைப்படங்கள், வெப் தொடர்கள் என மொத்தம் ஒன்பது இயக்குநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மேற்கு ரயில்வேக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ரயில் தொடர்பான படப்பிடிப்புகளை நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளையும் திரைப்படத் துறையினர் சுலபமாகப் பெறுவதற்கு வசதியாக மேற்கு ரயில்வே ஒற்றைச் சாளர முறையை கடைபிடித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வினீத் அபிஷேக்.